scorecardresearch

அசாமைப் போன்று தமிழகத்திலும் பிரச்சனை வெடிக்கும்! – வைகோ எச்சரிக்கை

பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி பெற்றவர்கள் துப்பரவுப் பணிக்கு விண்ணப்பிக்கும் நிலையில்தான் தமிழ்நாடு இருக்கிறது என்பது வேதனை அளிக்கிறது

அசாமைப் போன்று தமிழகத்திலும் பிரச்சனை வெடிக்கும்! – வைகோ எச்சரிக்கை

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4, வி.ஏ.ஓ.தேர்வுகளை ஒருங்கிணைத்து 9351 காலிப் பணியிடங்களை நிரப்ப 2018 பிப்ரவரி 11 இல் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இப்போட்டித் தேர்வில் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கும் வகையில் கடந்த ஆண்டு விதிகள் திருத்தம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டில் 80 இலட்சம் பேர் படித்து வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். விவசாயம் உள்ளிட்ட கூலித் தொழில்கள் புரிந்து படிக்க வைத்த பெற்றோர்களுக்கு பாரமாக இருக்கிறோமே? என்று மனம் வெதும்பி இருக்கின்றனர். வேலை பெற்று தம் பெற்றோர் படும் துன்பத்தைக் குறைக்காலம் என்று இலட்சக்கணக்கான இளைஞர்கள் பெரும் கனவுகளுடனும். எதிர்பார்ப்புகளுடனும் டி.என்.பி.எஸ்.சி போன்ற போட்டித் தேர்வுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. விதிகளில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, வெளி மாநிலத்தவரும் தேர்வு எழுதலாம் என்று தற்போது டி.என்.பி.எஸ்.சி அறிவிக்கை கூறுகிறது. பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளில் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகம், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளி மாநிலத்தவரும் போட்டித் தேர்வில் பங்கேற்க விதிகளில் திருத்தம் செய்திருப்பது முற்றிலும் நியாயமற்றது. கடும் கண்டனத்துக்கு உரியது.

8ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டிருந்த சென்னை உயர்நீதிமன்ற 140 துப்புரவாளர் பணி இடங்களுக்கு மூன்றாயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதற்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2500 பேரில் பெரும்பாலானவர்கள் பி.இ., எம்.ஏ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.பில் படித்த பட்டதாரிகள் என்பது தெரிய வந்துள்ளது. பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி பெற்றவர்கள் துப்பரவுப் பணிக்கு விண்ணப்பிக்கும் நிலையில்தான் தமிழ்நாடு இருக்கிறது என்பது வேதனை அளிக்கிறது.

இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள், வேலையின்றித் தவிக்கும் தமிழக இளைஞர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். “சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்; வேலையற்றோர் உள்ளங்களில் விபரீத எண்ணங்கள்” என்று பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டதைப் போன்ற ஒரு சூழ்நிலையை எடப்பாடி பழனிசாமி அரசு உருவாக்க வேண்டாம் என்று எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தில் அரசுத் துறை மற்றும் தனியார் துறைகளில் வெளி மாநிலத்தவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவது அசாம் மாநிலத்தில் எழுந்த பிரச்சினைபோல் எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலும் வெடிக்கும் நிலைமை ஏற்படும்.

எனவே, வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வு எழுதும் வகையில் டி.என்.பி.எஸ்.சி., விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Need to overcome the restrictions in tnpsc exams dmdk chief vaiko