நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடலுறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக தெரிவித்தார். இதையடுத்து, சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 17 ஆம் தேதி விசாரித்த நீதிபதி, கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், இந்த வழக்கை 12 வாரத்துக்குள் போலீசார் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதன்பேரில் வளசரவாக்கம் போலீசார் இந்த வழக்கில் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சம்மன் கிழிப்பு
இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு ஆஜராக கோரி சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், சீமான் ஆஜராக 4 வாரம் அவகாசம் வேண்டும் எனக் போலீஸ் நிலையத்தில் கடிதம் அளித்தார்.
இதையடுத்து, இன்று வெள்ளிக்கிழமை சீமான் ஆஜராக வேண்டும் என கூறி சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டினர். விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் எனவும் சம்மன் மூலம் எச்சரிக்கை விடுத்தனர். இந்த சம்மன் ஒட்டப்பட்ட சில நிமிடங்களில், சீமான் வீட்டிலிருந்து வெளியே வந்த நா.த.க நிர்வாகி ஒருவர் சம்மனை கிழித்து எறிந்தார்.
இதனையைடுத்து, நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் தலைமையிலான போலீசார் வீட்டிற்குள் சென்று அந்த நபர் குறித்து விசாரிக்க சென்றனர். அப்போது அங்கு இருந்த சீமான் வீட்டு காவலாளி போலீசாரை தடுத்தி நிறுத்தி வாக்குவாதம் செய்தார். மேலும் அவர் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் காவலாளியை போலீசார் குண்டுக் கட்டாக கைது செய்து அழைத்து சென்றனர். மேலும் சம்மனை கிழித்த நபரையும் போலீசார் கைது செய்தனர். அத்துடன் சீமான் வீட்டு காவலாளி வைத்திருந்த துப்பாக்கியையும் கைப்பற்றினர். சீமான் வீட்டு காவலாளியை அதிரடியாக போலீஸ் கைது செய்தது தொடர்பான வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகியது.
வாரண்ட்
இந்நிலையில், சீமான் வீட்டு காவலாளி மற்றும் சம்மனை கிழித்த உதவியாளரையும் கைது செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷுக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீமான் வீட்டில் நேற்று காவலாளியை கைது செய்த இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷுக்கு, 2019 ஆம் ஆண்டு வழக்கறிஞர் ஒருவரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சோமங்கலத்தை சேர்ந்த வழக்கறிஞர் பார்த்திபன் என்பவரை பிரவீன் ராஜேஷ் தாக்கியதாக தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த வழக்கில் வரும் மார்ச் 3ஆம் தேதி பிரவீன் ராஜேஷ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.