Advertisment

‘நீட்’ தேர்வு அவலம்: இந்த மனநிலையில் தேர்வு எழுதினால் எப்படி பாஸாவார்கள்?  

தேர்வுகள் தான் அழுத்தத்தை உண்டாக்குகிறது என்றால், இப்போது தேர்வு எழுதப் போகும் போதே மன உளைச்சலில்தான் போக வேண்டியிருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
‘நீட்’ தேர்வு அவலம்: இந்த மனநிலையில் தேர்வு எழுதினால் எப்படி பாஸாவார்கள்?  

Jabalpur: Candidates being checked before appearing for the NEET exam in Jabalpur on Sunday. PTI Photo(PTI5_7_2017_000081B)

சக்திவேல்

Advertisment

நீட் தேர்வுக்கு எவ்வளவோ எதிர்ப்புகள் எழுந்தும் பிடிவாதமாக மத்திய அரசு இந்தத் தேர்வை நடத்திவருகிறது. இட ஒதுக்கீடுகள் எதுவும் இல்லாமல் தேர்வில் பெறும் மதிப்பெண்தான் இனி மருத்துவப் படிப்பைத் தீர்மானிக்கப் போகிறது. இதன் சமூகப் பரிமாணங்களும் தக்கங்களும் ஒருபுறம் இருக்க, தேர்வு நடத்தப்படும் முறை இப்போது சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறது.

மருத்துவப் படிப்பு நுழைவுத்தேர்வான ‘நீட்’ தேர்வை நாடு முழுவதும் 11.35 லட்சம் மாணவ,மாணவிகள் எழுதினார்கள். சி.பி.எஸ்.சி. மேற்பார்வையில் நடைபெற்ற  இந்தத் தேர்வுக்காக, இந்தியா முழுவதும் 103 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு ஆடைக் கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டன.

பெல்ட், தொப்பி, மோதிரம், தோடு, மூக்குத்தி, செயின், செயின் டாலர், சட்டை பின்,  பேட்ஜ்  போன்ற எவற்றையும் அணிந்து வரக் கூடாது. அரைக் கை வைத்த லேசான ஆடைகளையே அணிந்திருக்க வேண்டும். ஆடையில் பெரிய பட்டன்களோ, பின்களோ, பூக்களோ இருக்கக் கூடாது. ஷூ வகைக் காலணிகளுக்கும் தடை.

தேர்வில் யாரும் முறைகேடாகச் செயல்படக் கூடாது என்பதற்காக இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக சிபிஎஸ்இ தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் இந்தக் கட்டுப்பாடுகள் குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடையே உருவாக்கப்படவில்லை. முக்கியமாக தேர்வின் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த போதுமான தகவல்கள் எல்லா மாணவர்களுக்கும் தெரியப்படுத்தப்படவில்லை.

இதனால் தேர்வு எழுதச் சென்ற மாணவர்கள் பலர் பல்வேறு அவலங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.  அரைக்கை சட்டைதான் அணிய வேண்டும் என்பதால் பல்வேறு மாணவர்கள் தங்களின் முழுக்கை சட்டைகளைத் தேர்வு மையங்களுக்கு வெளியேயே கத்திரிக்கோலால் அறுத்து எறிந்த பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவி ஒருவரிடம் சோதனை செய்யும்போது அவருடைய உள்ளாடையைக் கழற்றச் சொல்லியிருக்கிறார்கள். அப்படிச் செய்தது தனக்கு  மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது என்று அந்த மாணவி தெரிவித்தார். சோதனை செய்கிறோம் என்ற பெயரில் பெண்கள் சிலருக்கு நேர்ந்த இதுபோன்ற அவலங்கள் பெற்றோர்களைப் பெரும் கோபத்துக்குள்ளாக்கியது.

மாணவர்கள் அனைவரும் மருத்துவம் படித்து மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவில்தான் 10-ம் வகுப்பில் விழுந்து விழுந்து படித்து மதிப்பெண் வாங்கி, அதற்கான பாடத்தேர்வுகளை எடுத்துப் படிக்கிறார்கள். மருத்துவப் படிப்புக்கான கட் ஆஃப் மார்க்கை வாங்க வேண்டும் என்று 12-ம் வகுப்பிலும் மிகவும் சிரமப்பட்டுப் படிக்கிறார்கள். இப்போது அதையும் தாண்டி நுழைவுத் தேர்வுக்கும் கடினப்பட்டு படிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து தேர்வுகள் எழுதுவதை மாணவர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை.மாணவர்கள் கற்றுக்கொள்வதைக் காட்டிலும், மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களாகவே உருவாக்கப்படுகிறார்கள். இந்தக் கல்வி முறையால் இந்தியாவின் எதிர்காலத் தூண்கள் என்று சொல்லப்படும் மாணவர்கள் பெரும்பாலும் குறைவான செயல்திறனுடன் மட்டுமே தங்கள் வாழ்க்கையை எதிர்கொள்வதாக ஆய்வுகள் சொல்கின்றன.

அப்படி இருக்க அடுத்தடுத்து தொடர்ந்து வரும் தேர்வுகள் அவர்களின் மனநிலையைப் பெரும் அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறது. தேர்வுகள் தான் அழுத்தத்தை உண்டாக்குகிறது என்றால், இப்போது தேர்வு எழுதப் போகும் போதே மன உளைச்சலில்தான் போக வேண்டியிருக்கிறது.

மனித உரிமைகளை மீறும் இத்தகைய கட்டுப்பாடுகள்  தேவையா என்பது ஒருபுறம். அந்தக் கட்டுப்பாடுகள் குறித்த விழிப்புணர்வு எல்லா மாணவர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டதா என்பது முக்கியமான கேள்வி. இதுபோன்ற அவலங்களைச் சந்தித்துவிட்டு தேர்வு எழுதப் போகும் மாணவர்கள் இந்த மனநிலையில் எப்படி ஒழுங்காகத் தேர்வை எழுத முடியும் என்பதை இனியாவது தேர்வை நடத்துபவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

Students Mbbs Cbse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment