அரசுப் பள்ளியில் படித்த 650 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக ஆளுநர் கூறுகிறார். அவர்கள் தமிழக அரசின் 7.5% இடஒதுக்கீட்டினால் சேர்ந்தார்கள். நீட் தேர்வினால் சேரவில்லை, என நீட் மசோதாவுக்கு விலக்கு கேட்ட மாணவியின் தந்தை பேட்டி அளித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ‘எண்ணித் துணிக’ என்ற தலைப்பில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் மற்றும் பல்வேறு உயர் கல்வி கற்கும் மாணவர்களை அழைத்து கலந்துரையாடல் நடத்தி வருகிறார். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு 4 முறை இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன்; ஆளுனர் ஆர்.என்.ரவி உறுதி
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 12) நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்ற மாணவர்கள் இந்த முறை இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டனர். குறிப்பாக, 2023 ஆம் ஆண்டு நீட் தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.
இதில் பங்கேற்றிருந்த சேலத்தை சேர்ந்த மாணவியின் தந்தை அம்மாசியப்பன் ராமசாமி ஆளுநரிடம், "தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுகின்றனர். நிறைய மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இருப்பினும், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைக்கிறோம். எனவே, தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, "நீட் தேர்வுக்கு தடை கோருவதை நான் ஏற்கமாட்டேன். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திடமாட்டேன். இந்த விவகாரம் பொதுப் பட்டியலில் இருப்பதால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீட் தேர்வைப் பொறுத்தவரை, பயிற்சி மையங்களுக்குச் சென்றுதான், வெற்றிபெற வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. பள்ளியில் படிக்கும்போதே, ஆழமாக கவனித்துப் படித்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை படித்தால் போதும். ஒவ்வொரு முறை, நீட் தேர்வுக்கு விலக்கு கோருவது மாணவர்களின் கற்றல் திறனையே கேள்விக்குறியாக்கிவிடும்.
நீட் தேர்வு அரசியலாக்கப்படுகிறது. மாணவர்கள் வேறு பிரச்சினைக்காக தற்கொலை செய்யும் போது அரசியல்வாதிகள் ரூ 10 லட்சம், ரூ 20 லட்சம் என கொடுத்து நீட் தேர்வால்தான் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற பிம்பத்தை உருவாக்குகிறார்கள்.
மேலும், நீட் தேர்வு குழுவின் அறிக்கையின்படி, நீட் தேர்வு நடைமுறைக்கு முன்பு மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானதாகவே இருந்தது. நூற்றுக்கும் குறைவான மாணவர்களே மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவப் படிப்பைப் படித்துள்ளனர். ஆனால், நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தபின்புதான், அதிகளவில் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பெற்றுள்ளனர்" என்று ஆளுனர் பதிலளித்தார்.
இந்த சம்பவத்தையடுத்து வெளியே வந்து பேட்டியளித்த பெற்றோர் அம்மாசியப்பன், "என்னுடைய மகள் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். நேற்று செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை முடிந்துள்ளது. கடந்த 5-6 ஆண்டுகளாக நீட் வேண்டாம் என்று கூறி வருகிறோம். இன்றைக்கும் பள்ளிகளில், படிக்கும் சப்ஜெக்ட்டை மட்டும் வைத்து மாணவர்களை பாஸ் செய்ய வைப்பதில்லை. மாறாக இந்த பள்ளிகள் தனியார் கோச்சிங் சென்டரை கொண்டு நீட் தேர்வுக்கு மாணவர்களை தயாரிக்கின்றனர். இப்படியாகதான் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எந்த சப்ஜெக்ட் எப்படி வரும் என்றே தெரியவில்லை. 15 குழந்தைகள் இறந்துள்ளனர். ஆனால் தங்களது முயற்சியை கைவிடாமல் மாணவர்கள் சாதித்து வருகின்றனர்.
இந்த வருஷமும் டாப் மார்க் நமது மாணவர்கள்தான் பெற்றிருக்கிறார்கள். ஆயினும் இந்த வெற்றியை அடைய மாணவர்கள் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றனர். ஒரு நாளைக்கு தான் 15 மணி நேரம் படித்ததாக மாணவர் ஒருவர் கூறுகிறார். 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் குழந்தை. அவன் இளைஞர் அல்ல. இந்த குழந்தைகள் 15 மணி நேரம் படித்துதான் நீட்டை பாஸ் செய்ய வேண்டுமா?
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி அவ்வளவு உட்கட்டமைப்போடு சிறப்பாக இயங்கி வருகிறது. தேசிய அளவில் சிறந்த இடத்தில் உள்ளது. இப்படியான கல்லூரிகளை உருவாக்கியவர்கள் எந்த நீட் தேர்வை எழுதிவிட்டு வந்தார்கள்? என் பொண்ணு ஜெயிச்சிருச்சி. ஆனா ஒவ்வொரு பெற்றோரும் இதற்காக எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்று கேளுங்கள்? யாருக்காக அந்த செலவை செய்தார்கள்? என கேள்வியெழுப்புங்கள்.
அரசுப் பள்ளியில் படித்த 650 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக ஆளுநர் கூறுகிறார். அவர்கள் எதனால் சேர்ந்தார்கள். தமிழக அரசின் 7.5% இடஒதுக்கீட்டினால் சேர்ந்தார்கள். நீட் தேர்வினால் சேரவில்லை. நீட் பயிற்சி மையத்திற்கு செல்லாமல் தேர்ச்சி பெற்றது 100ல் ஒருவர் இருக்கலாம். நீட் பயிற்சிக்காக ஆண்டுக்கு 5 லட்சம் என 4 ஆண்டுகளுக்கு 20 லட்சம் செலவு செய்துள்ளேன். பொதுத்துறை ஊழியர் என்பதால் என்னால் சமாளிக்க முடிந்தது. மற்ற பெற்றோர்களால் முடியுமா? இந்த ஆதங்கம் அனைத்து பெற்றோர்களிடமும் உள்ளது.
நீட் விலக்கு தொடர்பாக ஆளுநரிடம் கேட்க எனக்கு இப்போது வாய்ப்பு கிடைத்தது. நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள் என நான் ஆளுநரிடம் கேட்டேன். அவர் முடியவே முடியாது என்று கூறிவிட்டார். ஆனால் அரசாங்கம் இருக்கிறது.. நாங்கள் அரசாங்கத்தை நம்புகிறோம்." என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil