இரண்டு நாட்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல் ஹாசன் வீடியோ ஒன்றைப் பகிர்ந்தார்.
பல்வேறு கட்சித் தலைவர்களும் டி.வியில் பேசுவது போலவும், கோபமடைந்த கமல் ரிமோட்டை தூக்கி, டி.வி-யில் வீசி அதை உடைப்பது போலவும் அந்த வீடியோ இருந்தது.
பின்னர் பேசிய கமல், யாருக்கு ஓட்டு போட வேண்டுமென்று, ’நீட்’டால் தன் பிள்ளையை இழந்தார்களே, அவர்களிடம் கேளுங்கள் எனக் குறிப்பிட்டார்.
தற்போது இதற்கு அனிதாவின் அண்ணன் மணிரத்னம் தனது முகநூலில் பதிலடி கொடுத்துள்ளார்.
”அண்ணன் கமல் சொன்னது போல யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில் நானும், எங்கள் குடும்பமும் தெளிவாகவே இருக்கிறோம்..
பாசிச பாஜக கூட்டணிக்கு ஒருபோதும் வாக்களிக்க கூடாது, என்பதில்......
அனிதா இறந்த போது "திருமாவளவன்" இதை சும்மா விடக்கூடாது என தாங்கள் கூறிய அதே திருமா தான் எங்கள் தொகுதியின் வேட்பாளர்..
திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வலியுறுத்தலின் காரணமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது.
ஆதலால் எங்களின் வாக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் தலைவர் திருமா (தலைவர் என்ற பதத்திற்கு முழு தகுதியுடையவர்) அவர்களுக்கே...” என தனது முகநூலில் குறிப்பிட்டிருக்கும் மணிரத்னம், இறுதியில் ’என்றும் கமல் ரசிகன்’ என அந்தப் பதிவை முடித்துள்ளார்.