நாடு முழுவதும் இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 499 நகரங்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு முறைகேடுகளைத் தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மாணவர்களும் கடுமையான சோதனைக்குப் பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப் படுகின்றனர். தமிழகத்தில் 1.50 லட்சம் மாணவர்கள் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மையங்களில் தேர்வு எழுதினர்.
இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. அப்போது தேர்வு எழுத வந்த மாணவி ஒருவருக்கு சோதனை என்ற பெயரில் உள்ளாடை அகற்ற சொன்னதாக செய்திகள் வெளியாகின. சம்பவம் குறித்து பெண் பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "நான் மயிலாப்பூரில் பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு மையத்திற்கு சென்றிருந்தேன். அப்போது மாணவி ஒருவர் அசௌகரியமாக இருந்தார். அவரிடம் நான் சென்று பேசிய போது, தேர்வின் போது ப்ரா உள்ளாடை அணிய வேண்டாம் என்று கூறியதால் சங்கடம் ஏற்பட்டதாக" கூறினார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் எனப் பலரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவித்த பெண் பத்திரிகையாளரிடம் ட்விட்டர் பதிவை நீக்க சிலர் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
அமைச்சர் அன்பில் மகேஷிடம் இது குறித்து கேட்ட போது, கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படும் நீட் தேர்வின் போது மாணவர்களின் ஹேர்பின், உடை என கடுமையான சோதனை நடத்தப்படுகிறது. இச் சம்பவம் கண்டனத்திற்குரியது. முதல்வர் ஸ்டாலினும் இந்த நடைமுறையை விமர்சித்துள்ளார் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“