நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறும் நடைமுறையை முடிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரிய மனு மீதான தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இது தொடர்பாக சென்னையை சேர்ந்த கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சார்பில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,
தமிழக மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்விலிருந்து விலக்களிக்க கோரி தமிழக சட்டபேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அதனை சட்டமாக்க ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் 6 மாத காலமாகியும் சட்ட மசோதா ஜனாதிபதிடம் கொண்டு செல்லப்படவில்லை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் மருத்துவ மாணவ சேர்க்கையை முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அதற்குள் ஜனாதிபதியிடம் ஒப்பதல் பெறுவதற்கான நடைமுறைகளை முடிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விசயம் தற்பொது மத்திய உள்துறையிடம் உள்ளது. இதில் தேவையான அனைத்து நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகின்றது. இப்பிரச்சினை தொடர்பாக விரைவில் ஒரு சுமுகமான தீர்வு எட்டப்படும் என தெரிவித்தார். இதனை அடுத்து அனைத்து தரப்பு வாதத்திற்கு பிறகு வழக்கின் தீர்ப்பை அடுத்த வாரம் புதன்கிழமை அளிப்பதாக தெரிவித்தனர்.