தேசிய தேர்வு முகமையின் கருணை மதிப்பெண்கள் சர்ச்சைக்கு வழிவகுத்ததையடுத்து, நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி மீண்டும் கோரிக்கையை எழுப்பியுள்ளனர்.
ஸ்டாலின் X பக்கத்தில் வெள்ளிக்கிழமை ஒரு பதிவில், “சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன.
வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய ஒன்றிய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்குகின்றன.
இவை, தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.
மீண்டும் ஒருமுறை அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறோம்:
நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை. அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை. சமூகநீதிக்கு எதிரானவை. தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை.
நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்! நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை”! என்று பதிவிட்டார்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற ஸ்டாலினின் கோரிக்கையை வரவேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.செல்வப்பெருந்தகை, மோசமான பொருளாதாரப் பின்னணியில் உள்ள மாணவர்களின் மருத்துவக் கல்வியை இந்தத் தேர்வு எட்டா கனியாக ஆக்கியது, நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது, என்றார்.
சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில், நீட் தேர்வை ஏற்கவோ அல்லது விலக்கு பெறவோ மாநிலங்களுக்கு உரிமை இருக்க வேண்டும் என்றார்.
பொதுப் பிரிவினருக்கு 164 மதிப்பெண்களை (22.77%) தேசிய தேர்வு முகமை நிர்ணயித்ததன் தர்க்கத்தை அவர் கேள்வி எழுப்பிய அவர், நாட்டில் ஒரு லட்சம் மருத்துவ இடங்கள் மட்டுமே இருக்கும் போது 13.16 லட்சம் பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர், என்றார்.
அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றவில்லை என்று விமர்சிக்கப்படும் நீட் தேர்வை கிரேஸ் மார்க் சர்ச்சைக்குப் பிறகு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
நாடு முழுவதும் கடந்த மே 5 ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான முடிவுகள் வரும் 14 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பத்து நாட்கள் முன்பாக கடந்த 4 ஆம் தேதியே தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டது.
மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட நீட் தேர்வில் நாடு முழுவதும் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர். ஹரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்றுள்ள நிலையில், தற்போது மாணவர்கள் நடந்து முடிந்து நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மறுதேர்வு நடத்த வலியுறுத்தியும் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“