நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் செலவை ஏற்க முன்வந்துள்ள நடிகர் - நடிகைகள்!!!

உதவிகளை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்துக் கொள்ளலாம்

மருத்துவம் படிப்பதற்கு   நீட்  நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று ஆன பிறகு,  தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக  நாளை (6.5.18) நீட்  தேர்வு நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.   இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்கு கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் பத்தனம்திட்டா நகரங்களிலும் அதேபோல ராஜஸ்தானிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனால், ஏழை மாணவர்கள் தேர்வு எழுத செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் தவிப்பைக் கருத்தில் கொண்டு சமூக வலைதளங்களில் பல்வேறு தன்னார்வ தொண்டர்கள் உதவி செய்வதாக அறிவித்துள்ளனர். அவர்களுடன் திரைத்துறையைச் சேர்ந்த  பல நடிகர், நடிகைகளும்  நீட் தேர்வுக்கு  வெளியூர் செல்ல  வசதி இல்லாமல் தவிக்கும் ஏழை மாணவர்களின் செலவுகளை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.   உதவிகளை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்துக் கொள்ளலாம்

நடிகர் பிரச்சன்னா முதல் ஆளாக தனது ட்விட்டர் பக்கத்தில், கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள்,  வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள்  நீட் நுழைவு தேர்வு எழுத வெளியூர்களுக்கு செல்ல உதவி வேண்டும் என்றால் தனது இன்பாக்ஸிற்கு விவரங்களை அனுப்பும் படி தெரிவித்துள்ளார். அவர்களின் செலவை முடிந்த வரை ஏற்று உதவி செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

அரசியல் பின்புலம் இருந்தாலும், அரசியலை விட்டு திரைத்துறையில் முழு கவனத்தை செலுத்தி வரும் அருள்நிதி, பிரபல சினிமா நிறுவனம் மற்று தானும் சேர்ந்து   வெளியூரில் நீட் தேர்வு எழுதும்  20 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுமாம், வெளி மாநிலத்திற்கு சென்று  நீட் தேர்வு எழுதும்  ஏதாவது ஒரு மாணவரின் உணவு, தங்குமிடம், பயணம் உள்ளிட்ட மொத்த செலவை தான் ஏற்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

பாடகி சின்மயியும்  நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ  முன்வந்துள்ளார்.

நடிகை கஸ்தூரியும், வெளி மாநிலங்களுக்கு சென்று நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவரும் ஆன, விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில்  நீட் தேர்வு எழுதும் மாணவர்கல் உதவிக்கு தன்னை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close