நீட் தேர்வுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து வழக்கில் தமிழக அரசு சிபிஎஸ்இ நாளைக்குள் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
இது தொடர்பாக சென்னை வேளச்சேரியை சேத்ந்த காளிமுத்து மைலவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு தேசிய அளவிலான நீட் தேர்வு இந்த் ஆண்டு மே 6 ஆம் தேதி நடத்தப்படவுள்ளது. தேர்வுக்கான அறிவிப்பில் தங்கள் மாநிலத்தில் ஏதேனும் மூன்று தேர்வு மையங்களை குறிப்பிட அறிவுறுத்தப்பட்டிருந்தது. நெல்லை, தூத்துக்குடி, குமரி, உள்ளிட்ட மாவட்டங்களில் நீட் தேர்வு எழுத விண்ணபித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை ஒதுக்காமல், கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு என்பது கணினி மூலம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஒதுக்கீடு செய்த தேர்வு மையங்களை மாற்ற முடியாது என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்திருந்தது. இதனால் நீட் தேர்வு எழுதும் 17 வயதே நிறைந்த மாணவர்கள் அண்டை மாநில தேர்வு மையங்களுக்கு தேர்வு எழுத செல்வதில் சிரமம் உருவாகும். எனவே தேர்வு மையங்களை தமிழகத்திற்குள் மறு ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்து இருந்தனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ், தெண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது, மனு தொடர்பாக நாளைக்குள் பதில் அளிக்க தமிழக அரசு, சிபிஎஸ்இ ஆகியோர் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.