நீளும் நீட் யுத்தம்: ஸ்டாலினுடன் ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் நேரடி விவாதம் நடக்குமா?
தற்போது நீட் தொடர்பாக திமுக என்ன வழக்கை தொடுத்தது? எங்கே தொடுத்தது? வழக்கு எண் என்ன? திமுகவின் சார்பில் என்ன வாதம் வைக்கப்பட்டது? என்பதையெல்லாம் திமுக தலைவர் நாட்டு மக்களுக்கு ஆதாரத்துடன் தெரியப்படுத்த வேண்டும் என ஓ.பி.எஸ். பேச்சு.
NEET Exam debate : நீட் சட்டம் எப்போது யார் ஆட்சியில் அமலுக்கு வந்தது என்பது தொடர்பான நீண்ட விவாதங்கள் சமீப காலங்களில் தமிழக அரசியலில் நடைபெற்று வருகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் இன்னும் ஒரு வாரத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் நீட் தேர்வுக்கு தமிழகத்தில் ஒப்புதல் வழங்கியவர்கள் யார், நீட் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது பெரும்பான்மை வகித்த மக்களவை உறுப்பினர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்று நீண்ட வார்த்தைப் போரே நடைபெற்று வருகிறது.
Advertisment
காணொளி மூலமாக பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று வரும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், ஜெயலலிதா அம்மையார் நீட் தேர்வுக்கு எதிராக தன்னுடைய கருத்தை பதிவு செய்தார். ஆனால் அவருக்கு பின்னால் ஆட்சிக்கு வந்த ஈ.பி.எஸ். காலத்தில் தான் இது நடைமுறைக்கு வந்தது. மக்கள் மத்தியில் திமுக கட்சியால் தான் தமிழகத்திற்கு நீட் தேர்வு வந்தது என்று தவறான கருத்துகளை பரப்புரை செய்து வருகின்றனர் என்று முதல்வர் கூறினார். மேலும், நீட் தொடர்பாக நேருக்கு நேர் விவாதத்திற்கு தயாரா என்றும் அதிமுகவினரிடம் கேள்வி எழுப்பினார் முதல்வர்.
நேற்று இது தொடர்பாக, முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, நாங்கள் நீட் விவாதத்திற்கு தயார் என்றும், நீட் தேர்வுக்கு எதிராக தங்களின் கட்சியே அதிகமாக குரல் எழுப்பியது என்றும் கூறியிருந்தார். தற்போது நீட் தொடர்பாக திமுக என்ன வழக்கை தொடுத்தது? எங்கே தொடுத்தது? வழக்கு எண் என்ன? திமுகவின் சார்பில் என்ன வாதம் வைக்கப்பட்டது? என்பதையெல்லாம் திமுக தலைவர் நாட்டு மக்களுக்கு ஆதாரத்துடன் தெரியப்படுத்த வேண்டும். வரலாறு தெரியாமல் மனம் போன போக்கில் பேச வேண்டாம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் கூறியதோடு அது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil