தமிழகத்தில் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரியில் சேர அரசு அதிகாரிகள் உதவியுள்ளார்களா? என்பது குறித்து பதில் அளிக்க சிபிசிஐடி காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மருத்துவ கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள 207 நிர்வாக ஒதுக்கீடு (மேனேஜ்மெண்ட் கோட்டா) இடங்களை முறையான கலந்தாய்வு மூலம் நிரப்பக்கோரி அரசுக்கு உத்தரவிட கோரி கோவையை சேர்ந்த தீரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாட்டு மாணவர்களுக்கான ஒதுக்கீடு, அகில இந்தியா மற்றும் மாநில அரசின் இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் விவரங்களை மதிப்பெண்களுடன் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், சமீப காலமாக மருத்துவ படிப்பில் சேர பல முறைகேடுகள் நடைபெறுவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மாணவர் உதித் சூர்யா மோசடி செய்த விவகாரத்தை சுட்டிக்காட்டினர்.
ஆள்மாறாட்டம் மூலமாக எத்தனை மாணவர்கள் இதுவரை மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்?
நீட் தேர்வு எழுதும் போது மாணவர்கள் காண்பிக்கும் அடையாள அட்டையும் அதே மாணவர்கள் கல்லூரியில் சேரும் போது காண்பிக்கும் அடையாள அட்டையும் ஆய்வு செய்யப்படுகிறதா.?
தேனி மருத்துவ கல்லூரி மாணவன் உதித் சூர்யா-வின் வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது.
உதித் சூர்யா மோசடி செய்தது தெரிந்த பிறகும் தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உண்மையா..?
நீட் தேர்வின் போது பின்பற்ற வேண்டிய அனைத்து நடைமுறைகளையும் அதிகாரிகள் முறையாகப் பின்பற்றுகிறார்களா..?
இரட்டை வசிப்பிட சான்றிதழ் பெற்று மோசடி செய்துள்ளார்களா..?
என்பது உள்ளிட்ட 7 கேள்விகளுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரினர்.
தேனி மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருவதாகவும். இதுவரை இரண்டு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களும் 3 தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் முறைகேட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களின் பெற்றோர்களும் இந்த முறைக்கேட்டில் தொர்பு உள்ளது விசாரணையில் தெரியவருவதாகவும் கூறினார்.
இதுவரை ஒரு இடைத்தரகர் கைது செய்யப்பட்டு இருப்பதாக அவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
அப்போது கூறிக்கிட்ட நீதிபதிகள் மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என தெரிவித்த கருத்தை அரசு உரிய முறையில் பரிசீலித்திருந்தால் இது போன்ற ஒரு நிலையை தற்போது ஏற்பட்டு இருக்காது என தெரிவித்தனர்.
இந்த முறைகேடு புகாரில் வெறும் மாணவர்கள் மட்டுமே தொடர்பு இருப்பதாக கூற முடியாது எனவும் இதில் எத்தனை இடைத்தரகர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். இதில் எத்தனை பேருக்கு தொடர்பு இருக்கிறது இதுபோன்ற ஆள்மாறாட்டத்தில் அரசு அதிகாரிகள் துணையில்லாமல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் எனவே இதுபோன்ற ஆள்மாறாட்டத்தில் அரசு அதிகாரிகள் தொடர்பு மற்றும் இதுவரை எத்தனை பேர் முறைகேடாக மருத்துவ கல்லுரியல் சேர்ந்துளனர். என்பது தொடர்பான விவரங்களை சிபிசிஐடி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மேலும் ஆள் மாறட்ட விவகாரத்தில் இதுவரை எவ்வளவு பணம் பரிமாற்றம் செய்யபட்டுள்ளது. எத்தனை நீட் பயிற்சி மையங்களில் இந்த முறைகேட்டு புகாரில் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் சிபிசிஐடி பதில் அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் நடைபெற்றது போல முறைகேடு புகார்கள் பிற மாநிலத்தில் நடைபெற்று உள்ளதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது தொடர்பாக மத்திய அரசின் மனிதவள மேம்பாடு மற்றும் சுகாதாரத்துறை தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட நீதிபதிகள் இது தொடர்பாக மத்திய அரசு அடுத்த விசாரணையில் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்தனர். இந்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் தாமாக முன்வந்து எதிர்மனுதாரர் சேர்த்த நீதிமன்றம் ஆள் மாறட்ட முறைக்கேட்டில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் இதுவரை நடைபெற்ற முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை தொடர்பான முழுமையான விவரங்களை அக்டோபர் 15 ஆம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அக்டோபர் 15-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.