Neet Exam 2019: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் வெங்கடேசனின் மகன் உதித்சூர்யா, தேனி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தார். அவர் ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த விவரம் பின்னர் வெளியானது.
இது குறித்து தேனி சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி வழக்குப்பதிவு செய்து உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசனை திருப்பதியில் கைது செய்தனர். இதற்காக அதிகாரிகள் மற்றும் புரோக்களுக்கு பெரிய அளவில் பல கோடி ரூபாய் கைமாறியுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட வெங்கடேசன் மற்றும் அவரது மகன் உதித்சூர்யாவிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நீட் தேர்வு மையம் நடத்தி வரும் ஜார்ஜ் ஜோசபுக்கு பெரிய அளவில் பங்கு இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் நீட் தேர்வு மையம் நடத்தி வரும் ஜார்ஜ் ஜோசபை திருவனந்தபுரத்தில் நேற்று கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி. போலீசார் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நீட் ஆள்மாறாட்டம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி முறைகேடாக மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக சென்னையில் நேற்று ஒரு மாணவி உள்பட 3 பேர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கினார்கள்.
இதற்கிடையே உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விழுப்புரம், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 3 மாணவர்கள் நீட் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளன. சென்னையில் 3 மாணவர்களிடம் விசாரணை நடைபெறும் நிலையில், இன்று மேலும் 3 மாணவர்கள் மற்றும் அவர்களின் தந்தையை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நீட் ஆள்மாறாட்ட விவகாரம் தமிழகத்தில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத் தக்கது.