NEET exam fraud Udith Surya inquiry by CBCID Police: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த உதித் சூர்யாவைக் கைது செய்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்பவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். இதையடுத்து, அவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்ததைத் தொடர்ந்து அவருடைய மருத்துவப்படிப்பு சேர்க்கை ரத்து செய்யப்பட்டது. தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ராஜேந்திரன் புகாரின் பேரில் உதித் சூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்ய நடவடிக்கையில் இறங்கினர். இதனால், உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினருடன் தலைமைமறைவானார். தேனி போலீசார் தனிப்படை அமைத்து உதித் சூர்யா மற்றும் அவருடைய குடும்பத்தினரை தீவிரமாக தேடிவந்தனர். இதனிடையே, தமிழக காவல்துறை டி.ஜி.பி திரிபாதி இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணைக்கு மாற்றி உத்தவிட்டார். இதனால், சி.பி.சி.ஐ.டி போலீஸாரும் உதித் சூர்யாவை தேடிவந்தனர். இந்த நிலையில், அவர்கள் திருப்பதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் திருப்பதி விரைந்த தேனி தனிப்படை போலீஸார் அங்கே உதித் சூர்யா மற்றும் அவாது குடும்பத்தினரைக் கைது செய்தனர். உதித் சூர்யாவையும் அவருடைய பெற்றோர்களையும் சென்னை கொண்டுவந்த போலீஸார் சென்னை எழும்பூர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். போலீஸார் அவரிடம் பல மணிநேரம் விசாரணை நடத்தினர். பின்னர், உதித் சூர்யா தேனிக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருடைய பெற்றோர்களும் உடன் சென்றனர்.
தேனி சி.பி.சி.ஐ.டி போலீஸ் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட உதித் சூர்யாவிடம் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக போலீஸார் சி.பி.சி.ஐ.டி எஸ்.பி முன்பு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் போலீஸார் அவரிடம், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததில் யார் யார் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா?” என்று விசாரணை நடத்தினர். அதே போல, உதித் சூர்யாவின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில், மகனை மருத்துவர் ஆக்க வேண்டும் என்ற ஆசையில் இப்படி செய்துவிட்டேன் என்றும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தால் இவ்வளவு பின்விளைவுகள் வரும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் உதித் சூர்யாவின் தந்தை சிபிசிஐடி போலீஸாரிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆள்மாறாட்டம் பற்றி உதித் சூர்யாவின் தாயாருக்கு தெரியவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.
மேலும், நீட் ஆள்மாறாட்டம் செய்ததில் உதித் சூர்யாவின் பெற்றோர் மீது குற்றவாளியை தப்பிக்க விடுதல், குற்றவாளிக்கு இடம் கொடுத்தல், கூட்டு சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் எஸ்.பி. விஜயகுமார் தெரிவித்தார்.
விசாரணைக்குப் பின் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய சி.பி.சி.ஐ.டி போலீஸார் முடிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் காவல் கேட்கவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இதனிடையே, நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில், தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அறையில் சி.பி.சி.ஐ.டி போலீஸ் டி.எஸ்.பி.ஜெகதீஷ் குமார் தலைமையில் சோதனை நடைபெற்றது. புகாருக்கு உள்ளான உதித் சூர்யாவின் வகுப்பறை, நேர்காணல் நடந்த இடங்களிலும் ஆய்வு செய்தனர். மேலும், தேனி அரசு மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வர் எழிலரசனிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைதான உதித் சூர்யா, மற்றும் அவரது தந்தை வெங்கடேசனை தேனி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி ஆஜர்படுத்தியது.