மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஐந்து அமைச்சர்கள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தனர்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “அரசுப் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். 7.5% உள்ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால், பல அரசுப் பள்ளி மாணவர்கள் பலனடைவார்கள். இது சமூக நீதிக்கான பூமி, " என்று தெரிவித்தார்.
மேலும், தமிழக ஆளுநர் எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார், உடனடியாக ஒரு நல்ல முடிவை அறிவிப்பேன் என்று உறுதியளித்தார்" என்றும் கூறினார்.
முன்னதாக, மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்த ஆண்டு இடஒதுக்கீடு வழங்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதற்கு, கண்டனம் தெரிவித்து மு க ஸ்டாலின் விடுத்த செய்தி அறிவிப்பில், "மத்திய அரசின் நிலைப்பாடு இடஒதுக்கீட்டுக்கு எதிரான அரசின் மனப்பான்மையை பிரதிபலிப்பதாக கூறியுள்ளார். மேலும், வங்கி அதிகாரிகள் பணிக்கான தேர்வில் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலில் இனத்தவருக்கான இடஒதுக்கீட்டில் முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை பிரித்துக் கொடுக்கும் முடிவை கைவிட வேண்டும்" எனவும் அவர் மத்திய அரசை வலியுறுத்தினார்.
முன்னதாக, கடந்த அக்டோபர் 5ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், அமைச்சர்கள் டாக்டர்.விஜயபாஸ்கர், கே.பி அன்பழகன், சி.வி சண்முகம், தலைமை செயலாளர் சண்முகம், உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil