நீட் உள்ளிட்ட விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேச துரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அதிமுக (அம்மா) அணியைச் சேர்ந்த புகழேந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் விவகாரம் உள்ளிட்டவற்றில் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதாக கூறி அதிமுக ( அம்மா ) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, வெற்றிவேல் உள்ளிட்ட 17 மீது சேலம் அன்னதானபட்டி காவல் நிலையத்தில் தேசதுரோக வழக்கு பதிவு செய்தனர். கே.ஆர்.எஸ். சரவணன் என்பவர் கொடுத்த புகாரில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி புகழேந்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், நீட் போராட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் படியே தினகரன், புகழேந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது என்றும், விசாராணை முடியும் முன்பே அவசர கதியில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் நீட் தேர்வுக்கு எதிராக பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டம் நடத்திய இவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டது என்றும், நீட் தேர்வு போராட்டம் என்ற பெயரில் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் நடந்ததாகவும், அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்பும் வகையில் வாசகங்கள் துண்டு பிரசுரங்களில் இடம் பெற்றிருதன என வாதிட்டார்.
புகழேந்தி வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி, துண்டு பிரசூரங்களில் அண்ணா, பெரியார் போன்றவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன, வன்முறையை தூண்டும் விதமாக வார்த்தைகள் இல்லை, எப்படி அவதூறு வழக்கு பதிய முடியும் என்றும், அதேபோல் 124 (A) பிரிவின் கீழ் தேசதுரோக பிரிவில் எப்படி வழக்கு பதியலாம் என கேள்வி எழுப்பினார்.
பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
இதனையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரும் புகழேந்தியின் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார். நீட் போராட்டத்தை முறைபடுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலின் அடிப்படியிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் துண்டு பிரசுரங்களில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் மற்றும் அதனின் தன்மை பார்க்கும் போது அரசு வாதத்தை ஏற்பதாகவே உள்ளது.இன்னும் விசாரணை முழுமையாக நிறைவடையவில்லை. இந்த விஷயத்தில் தற்போதைய நிலையில் அரசு தரப்பு கூறுகின்ற குற்றச்சாட்டுகள் குறித்த அடிப்படை முகந்திரம் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதுகின்றது. மேலும் தற்போதைய நிலையில் மனுதரார் கோரிக்கை ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதி புகழேந்தி மனு தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.