NEET/ Chennai : சென்னையைச் சேர்ந்த உதித்சூர்யா 2019-2020-ம் ஆண்டு ‘நீட்’தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தான் தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்ந்தார் என்ற அதிர்ச்சி செய்தி இன்னும் மறைவதற்குள், மருத்தவக் கல்லூரி சேர்கையில் மேலும் சில முறைகேடுகள் தற்போது அம்பலமாகி உள்ளது.
மதுரை மருத்துவக் கல்லூரியில், கடந்த பத்தாம் தேதி ரியாஸ் என்கிற மாணவன் மருத்துவ ஆலோசனைக் குழுவால் (எம்சிசி) அளிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி சேர்கை கடிதத்ததை மதுரை மருத்துவக் கல்லூரி டீனிடம் கொடுத்துள்ளார். இந்த சேர்க்கை கடிதத்தைப் பார்த்த டீனிற்கு சந்தேகம் எழுந்தது. இதனால், தல்லாகுளம் போலீசாருக்கு தகவலும் கொடுத்தார். போலி சேர்கை கடிதத்தை ரியாஸ் வைதிருந்ததாக போலீசார் அவரைக் கைதும் செய்தனர்.
இதேவகையான போலி சேர்கை கடிதத்ததை கொண்டு ஏற்கனவே இரண்டு நபர்கள் இக்கல்லூரியை அணுகியுள்ளனர். அப்போது, போலிஸ் வருவதற்குள் அந்த இருவரும் தப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
போலிசாரின் விசாரணையில் விக்ரம் சிங் என்கிற ஒருவர் இந்த ரியாஸிடம் 40 லட்சம் கொடுத்தால் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை கடிதத்தை வாங்கி தருவதாக சொல்லியிருக்கிறார். முன் பணமாக நான்கு லட்சத்தைக் கொடுத்து மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர போலி கடிதத்தோடு வந்திருக்கிறார் ரியாஸ்.
60க்கும் மேற்பட்ட மாணவர்களை விக்ரம் சிங் இது போன்று ஏமாத்தியுள்ளார் என்கிற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. போலீசார் தற்போது தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். விக்ரம் சிங்கைப் பிடிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.