நீட் தேர்வு போலி மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்து மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற பரமக்குடியைச் சேர்ந்த மாணவியின் தந்தை பல் மருத்துவர் பாலச்சந்திரனை போலீசார் இன்று பரமக்குடியில் கைது செய்தனர்.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நவம்பர் 8ம் தேதி முதல் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கியதால், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் 350 அரசுப் பள்ளி மாணவர்கள் இடம்பெற்றனர்.
இதைத்தொடர்ந்து, பொது பிரிவினருக்கான மருத்துவக் கலந்தாய்வு நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை நடைபெற்றது. பொதுப் பிரிவினருக்கான மருத்துவக் கலந்தாய்வில், பங்கேற்ற மாணவர்களின் நீட் தேர்வு மதிப்பெண்கள்சான்றிதழ்களை மருத்துவ கல்வி இயக்ககத்தின் மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
அதில், டிசம்பர் 7-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த மாணவி தீக்ஷா (18) மருத்துவ கலந்தாய்வில் அளித்த சான்றிதழ்களில் நீட் தேர்வு மதிப் பெண் சான்றிதழ் குறித்து சந்தேகம் எழுந்தது. அந்த சான்றிதழும் வேறு ஒரு மாணவியின் மதிப்பெண் சான்றிதழும் ஒன்றாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலாளர் டாக்டர் செல்வராஜ், பெரியமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், போலீசார் நடத்திய விசாரணையில், பரமக்குடியை சேர்ந்த பல் மருத்துவருமான பாலச்சந்திரன் என்பவரின் மகள் தீக்ஷா மருத்துவக் கலந்தாய்வில் போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் சமர்பித்தது தெரியவந்தது. நீட் தேர்வில் 27 மதிப்பெண்கள் மதிப்பெண் பெற்ற தீக்ஷா மோசடி செய்து அதை 610 மதிப்பெண்களாக திருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவி தீக்ஷா நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழை போலியாக சமர்பித்ததற்கு அவருடைய தந்தை பல் மருத்துவர் பாலச்சந்திரன் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, மருத்துவக் கலந்தாய்வில் நீட் மதிப்பெண் சான்றிதழை போலியாக சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்ட மாணவி தீக்ஷா மற்றும் அவரது தந்தை பாலச்சந்திரன் மீது போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், மோசடியில் ஈடுபட்ட மாணவி தீக்ஷாவின் தந்தை பல் மருத்துவர் பாலச்சந்திரனை பெரியமேடு போலீசார் பரமக்குடியில் இன்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பாலச்சந்திரனை போலீசார் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை ஜனவரி 11ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதையடுத்து சிறையில் அடைத்தனர். மேலும், அவருடைய மகள் மாணவி தீக்ஷாவையும் கைது செய்ய பெரியமேடு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.