நீட் தேர்வைக் கண்டித்து ம.தி.மு.க. தொண்டர் ஜகுபர் அலி தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் மதிமுக தொண்டர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்த அறிக்கை வருமாறு :
‘புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், ஆவுடையார் கோவில் ஒன்றியத்தில், பெருநாவலூர் - முள்ளியான்வயல் என்ற கிராமத்தில் வசித்து வரும் ஜகுபர் அலி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கக் காலத்திலிருந்து பணியாற்றும் உறுதியான தொண்டர் ஆவார். கழகத்தின் அனைத்துப் போராட்டங்களிலும் அவர் கலந்து கொண்டுள்ளார்.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அவர், இன்று பகலில் அவரது வீட்டில், கழுத்தில் கட்சித் துண்டையே முறுக்கிக் கயிறாகக் கட்டித் தூக்கில் தொங்கியுள்ளார். சத்தம் கேட்டு வந்த அவரது குடும்பத்தினர் கயிற்றை அறுத்து, அவரைக் கொண்டுபோய் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர். அவருக்கு நினைவு இல்லை; உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
தூக்கு மாட்டிக் கொள்வதற்கு முன்பு அவர் தனது கோபத்தையும் வேதனையையும் எதிரே வைத்திருந்த அலைபேசியில் பதிவு செய்துள்ளார். நீட் தேர்வுக்குப் பிற மாநிலங்களுக்கு மாணவ மாணவிகளை அனுப்பியது மோடி அரசின் கொடுமை; தமிழக அரசின் கோழைத்தனம். மாணவிகளின் ஆடைகளை விலக்கியும், மார்பகங்கள் சோதனையிட்டும் நடத்திய கொடுஞ்செயலைக் குறிப்பிட்டு தனது மனக் குமுறலை - உள்ளக் கொதிப்பைப் பேசியுள்ளார்.
நேற்று கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் இறந்து போன கிருஷ்ணசாமி பிரச்சினையில், நான் ஆளுநர் சதாசிவம் அவர்களிடம் பேசியதையும் குறிப்பிட்டுள்ளார். எனது போராட்டங்களைக் குறிப்பிட்டு, 24 ஆண்டுகள் போராடியும் தமிழகத்துக்கு விமோசனம் இல்லையே என்று வருந்தியவாறு, “நான் சாகப் போகிறேன்,” என்று கூறி தூக்கு மாட்டித் தொங்கியுள்ளார்.
அடிக்கடி என்னிடம் அலைபேசியில் பேசுவார்; தமிழ்நாட்டு நிலைமைகளைக் கூறி வேதனையைக் கொட்டுவார்; நான் அவருக்கு ஆறுதல் கூறுவது வழக்கம். அந்த ஏழ்மையான குடும்பத்தில் அவருக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர். அவர் உயிர் பிழைக்க வேண்டுமே என்ற ஏக்கத்தோடு தமிழகத்திலுள்ள இளைஞர்களை - குறிப்பாக கழகக் கண்மணிகளை “உயிரைப் போக்கிக் கொள்ள முயலாதீர்கள்; உங்கள் குடும்பத்தினரைத் துயரப் படுகுழியில் தள்ளாதீர்கள்” என்று உடைந்துபோன உள்ளத்தோடு இருகரம் கூப்பி மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.’ இவ்வாறு வைகோ அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.