Neet exam result 2019 : நீட்.. தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை பறிக்க வந்தது என்ற விமர்சனங்கள் ஒருபுறம். ஏழை எளிய மாணவர்களும் இலவசமாக எளிமையாக மருத்துக்கனவை நனவாக்க கொண்டு வரப்பட்டுள்ள அறிய திட்டம் என்ற பதில் ஒரு புறம்.
இந்த இரண்டு எதிர் எதிர் கருத்துக்கள் ஒருபுறம் சென்றுக் கொண்டிருக்க கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் நீட் தேர்வு நடந்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டார்.தமிழகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அனிதாவின் மரணத்தை தொடர்ந்து அடுத்த வருடமே தமி்ழகத்தில் நீட் தேர்வு நடைப்பெற்றது.
கடந்த வரும் தனது மகனை நீட் தேர்வு எழுத கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி மாரடைப்பால் மரணமடைந்தார். தேர்வை எழுதி விட்டு வெளியில் வந்த அவரின் மகன் “அப்பா எங்கே” என்று கேட்ட கேள்வியை தமிழகம் அவ்வளவு எளிதாக மறந்து விடவில்லை. ஆனாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் மாணவர்கள் வேறு வழியின்றி பெற்றோர்கள், ஆசிரியர்கள், சிறப்பு வகுப்புகள் துணையுடன் நீட் தேர்வை எதிர்க் கொண்டு வருகின்றனர்.
சிபிஎஸ்சி மாணவர்களுக்கு நீட் தேர்வை எதிர்க்கொள்வது மிகவும் எளிமையான ஒன்று என்றாலும், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வு மிக மிக கடினம் என்ற கருத்தை மீண்டும் மீண்டும் பதிவு செய்து வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கும் நீட் தேர்வை எளிமையாக்கும் வகையில் தமிழக கல்வித்துறை அரசு சார்பில் சிறப்பு நீட் பயிற்சி வகுப்புகளையும் ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில் 2019 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. தமிழகத்தில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 78 மாணவர்கள் தேர்வு எழுதினர்.இதில் 59 ஆயிரத்து 785 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் தமிழக அளவில் முதல் 50 இடங்களை தமிழக மாணவர்கள் யாருமே பிடிக்கவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
நேற்றைய தினம் தேர்வு முடிவுகள் வெளியான பின்பு, தேர்வில் தோல்வியடைந்த 2 மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 12 ஆம் வகுப்பு தேர்வில் 2 மாணவிகளும் நல்ல மதிப்பெண்களை பெற்றிருந்த போதும் மருத்துவ கனவு பறிபோகிவிட்டதாக எண்ணி அவர்கள் தற்கொலை செய்துக் கொண்டதாக அவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நேரத்தில் மாணவர்கள் ஒரு விஷயத்தை நன்கு மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இது முடிவல்ல ஆரம்பம் மட்டுமே. இதை மனதில் கொண்டு நீட் தேர்வில் தமிழக அளவிலும், இந்திய அளவிலும் சாதித்து காட்டிருக்கிறார் மாற்றுத்திறனாளி மாணவன் கார்வண்ண பிரபு.
நீட் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தமிழக அளவில் முதல் இடத்தையும், அகில இந்திய அளவில் 5-வது இடத்தையும் பெற்று பெருமை சேர்த்துள்ள கார்வண்ண பிரபு கரூர் மாவட்டதை சேர்ந்தவர். பிரபுவின் தந்தை ஒரு மருத்துவர். தனது தந்தை போல தானும் மருத்துவராக வேண்டும் என்ற வெறியுடன் படித்திருக்கிறார் மாணவன் பிரபு. ’
பிளஸ் டூ தேர்வில் 00-க்கு 476 மதிப்பெண் பெற்ற பிரபு, நீட் தேர்வுக்காக தினமும் 4 மணி நேரம் செலவழித்திருக்கிறார். இவர் நீட் தேர்வுக்கு தனியார் சிறப்பு பயிற்சி வகுப்புக்கு எல்லாம் செல்லவில்லை. கடந்த 2 வருடமாக நீட் தேர்வாக தொடர்ந்து பள்ளியில் சிறப்பு வகுப்பில் படித்திருக்கிறார்.
பிரபுவின் இந்த சாதனையை எண்ணி அவரின் பள்ளி மற்றும் பெற்றோர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். தன்னால் எப்படி சாதிக்க முடிந்தது என்பதை குறித்து பிரபு பகிர்ந்திருப்பதாவது, “என் பெற்றோர்கள் இல்லையென்றால் என்னால் இதை கட்டாயம் சாதித்திருக்க முடியாது. 2 வருடம் இதற்காக கடுமையாக உழைத்தேன்.
என்னால் சாதிக்க முடிந்தது என்றால் என்னை போன்ற மற்ற மாணவர்களாலும் இதை கட்டாயம் சாதித்துக் காட்ட முடியும். தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர்கள் தற்கொலை என்ற செய்திகளை என் பெற்றோர்கள் என்னிடம் கூறினார்கள். மிகவும் கஷ்டமாக இருந்தது. முயற்சியை கைவீடாதீர்கள் ஃப்ரண்ட்ஸ் அடுத்தமுறை முயற்சி செய்யுங்கள் வெற்றி உங்களுக்கே” என்று கூறியுள்ளார்.
பிரபுவின் இந்த பதில், அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.