டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவு கொண்ட மாணவர்கள், நீட் தேர்வில் அடையும் தோல்வியால், தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகி வருகிறது.இது, அம்மாணவர்களின் பெற்றோர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர, மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்களுடன் கூடிய தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1200 மதிப்பெண்களுக்கு 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். நீட் தேர்வில் அவரால், 720க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மருத்துவராகும் கனவு தகர்ந்தநிலையில், கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு தோல்வியால், தமிழகத்தில் நிகழ்ந்த முதல் தற்கொலை அனிதாவின் மரணம் ஆகும்.
இந்தாண்டு ( 2019) நீட் தேர்வு முடிவுகள், கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் தோல்வியடைந்ததினால், திருப்பூரை சேர்ந்த ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டையை சேர்ந்த வைஸ்யா, விழுப்புரத்தை சேர்ந்த மோனிஷா உள்ளிட்ட மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
நீட் தேர்விற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தாலும் பல போராட்டங்கள் நடந்திருந்தாலும் இறதியில் வேறு வழியின்றி, நீட் தேர்வை, கடந்த சில ஆண்டுகளாக ஏற்றுக்கொண்டு அதனை தமிழக மாணவர்கள் எழுதி வருகிறார்கள்.
தமிழகமே வேண்டாம் என அலறிய நீட் தேர்வால் தற்போது அடுத்தடுத்து மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.