நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வுக்கு தயாராகி வந்த அரியலுரைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு இரங்கல் தெரிவித்த திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்தார்.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் மாணவர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், நீட் தேர்வு அச்சம் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், மருதூர் மதுரா இலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் விக்னேஷ்(19). இவர் சிறிய வயதில் இருந்தே டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்துள்ளார். இவருடைய தந்தை அதே ஊரில் ஒரு பெட்டிக் கடை வைத்து வந்துள்ளார்.
மாணவர் விக்னேஷ் செந்துறையில் உள்ள தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2017-ம் ஆண்டு பிளஸ் டு படித்து முடித்த விக்னேஷ் பிளஸ் டுவில் 1006 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதையடுத்து அவர் டாக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் கேரளாவில் உள்ள நீட் பயிற்சி மையத்திலும் துறையூரில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்திலும் பயிற்சி பெற்றுள்ளார். 2 முறை நீட் தேர்வு எழுதிய விக்னேஷ் தேர்வில் ஒரு முறை தோல்வி அடைந்தார். ஒரு முறை வெற்றி பெற்றுள்ளார். ஆனாலும், மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை.
இதனால், டாக்டராகிவிட வேண்டும் என்ற லட்சியத்தில், மீண்டும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வுக்கு தயாராகி வந்தார். வருகிற 13ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வில் வெற்றி பெற முடியுமா என்ற அச்சத்தில் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால், மாணவர் விக்னெஷ் செப்டம்பர் 9ம் தேதி வீட்டை விட்டுவெளியேறி உள்ளார். அவர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில், அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்னேஷின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாணவர் விக்னேஷ் நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்பு உள்ளது. ஏற்கெனவே நீட் தேர்வு காரணமாக அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்ட சோகம் என்னும் ஆறா வடுவாக உள்ளது. இந்த நிலையில் மாணவர் விக்னேஷ் நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாணவர் விக்னேஷ் மரணத்துக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்தார்.
இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், மாணவர் விக்னேஷ் மன உளைச்சல் காரணமாக நேற்று தற்கொலை செய்துகொண்டு இறந்தார் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த செல்வன் விக்னேஷ் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு / அரசு சார்ந்த பணி வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்துகொண்டதற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, இலந்தங்குழிக்கு நேரில் சென்று, தற்கொலை செய்துகொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மாணவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மாணவர் விக்னேஷ் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும், மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். பாமக தலைவர் ஜி.கே.மணி, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, பாமக சார்பில், மாணவர் விக்னேஷ் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
நீட் தேர்வால் மன உளைச்சலுக்குள்ளாகி தற்கொலை செய்துகொண்ட மாணவன் விக்னேஷ் உடலை நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. மாணவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.