நாடு முழுவதும் நாளை (மே 6) நீட் தேர்வு நடக்கிறது. வெளிமாநிலம் செல்லும் தமிழ்நாடு மாணவர்களுக்கு உதவி செய்வதாக பலரும் அறிவித்து வருகின்றனர்.
நீட் நுழைவுத் தேர்வு, மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களுக்கு கட்டாயம்! இதில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே எம்.பி.பி.எஸ். படிப்புக்கு சேர்க்கை நடைபெறும். நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நீட் நுழைவுத் தேர்வு நடக்கிறது.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறும் முயற்சி கடந்த ஆண்டே நிறைவேறவில்லை. இந்த ஆண்டு இன்னொரு அடியாக தமிழக மாணவர்கள் பலருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்திருக்கிறது, நீட் தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.இ.! குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 250 மாணவர்களுக்கும், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளத்தில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவர்கள் நேற்று பஸ், ரெயில்களில் புறப்பட்டு சென்றனர். சிலர் கார்களில் புறப்பட்டு சென்றனர். இதேபோல் தஞ்சையில் இருந்து சுமார் 50 மாணவ- மாணவிகள் பஸ், ரெயில், கார், வேன்கள் மூலம் எர்ணாகுளம் புறப்பட்டு சென்றனர். ராஜஸ்தானிலும் தமிழக மாணவர்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 250 மாணவர்களுக்கும், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளத்தில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவர்கள் நேற்று பஸ், ரெயில்களில் புறப்பட்டு சென்றனர். சிலர் கார்களில் புறப்பட்டு சென்றனர். இதேபோல் தஞ்சையில் இருந்து சுமார் 50 மாணவ- மாணவிகள் பஸ், ரெயில், கார், வேன்கள் மூலம் எர்ணாகுளம் புறப்பட்டு சென்றனர்.
நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் அல்லது பஸ் கட்டணம் மற்றும் தலா 1000 ரூபாய் உதவி வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். கேரளா செல்லும் மாணவர்களுக்கு நெல்லையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
வெளிமாநிலங்களை சேர்ந்த தமிழ் சங்கங்கள் பலவும் தாங்களும் உதவ தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன. இது தொடர்பான தொலைபேசி எண்களை சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளனர். இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோர் நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவ மாணவிகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக நேற்று குறிப்பிட்டனர். டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பிலும் உதவி செய்வதாக கூறப்பட்டிருக்கிறது.
நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு செல்லும் 20 மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து செலவுகளையும் தானும், தனது நண்பரும் தயாரிப்பாளருமான டில்லிபாபுவும் ஏற்றுக்கொள்வதாக நடிகர் அருள்நிதி அறிவித்து உள்ளார். இதேபோல் நடிகர் பிரசன்னா 2 மாணவர்கள் வெளி மாநிலத்துக்கு விமானத்தில் சென்று வர தேவையான செலவுகளை தான் ஏற்றுக்கொள்வதாக கூறி இருக்கிறார்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ.யுமான தமிமுன் அன்சாரி, வெளி மாநிலத்துக்கு நீட் தேர்வு எழுத செல்லும் தனது தொகுதியைச் சேர்ந்த 4 ஏழை மாணவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கினார். கூடுதல் செலவு ஏற்பட்டால் அதை ஏற்றுக்கொள்வதாகவும் அவர்களிடம் உறுதி அளித்தார்.
நீட் தேர்வு எழுத கேரளாவுக்கு வரும் தமிழக மாணவர்களுக்கு உதவ முக்கிய பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்படும் என்று அந்த மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்து உள்ளார். இதேபோல், தமிழக மாணவர்களுக்கு உதவ தயாராக இருப்பதாக, கோட்டயம் இந்து நாடார் உறவின்முறை செயலாளர் வெ.கலைச்செல்வன் சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து இருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.