நீட் விலக்குச் சட்ட மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்வு விலக்கு தொடர்பாக அடுத்த சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழக சட்டமன்றத்தில் 13 கட்சிகளின் பிரதிநிதிகள் இடம் பெற்றிருக்கும் நிலையில், ஸ்டாலின் தலைமையிலான நீட் விலக்கு ஆலோசனைக் கூட்டத்தை 3 கட்சிகள் புறக்கணித்தன. அதாவது பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள புரட்சி பாரதம் கட்சிகளும், பா.ஜ.க-வும் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதேநேரத்தில், மீதமுள்ள தி.மு.க, பா.ம.க, சி.பி.எம், சி.பி.ஐ, காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், த.வா.க, ம.ம.க உள்ளிட்ட 10 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "நீட் தேர்வு, பயிற்சி மையங்களின் நன்மைக்காக, சிலரின் சுயநலனுக்காக கொண்டுவரப்பட்டது.வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வு சாதகமாக உள்ளது. பல தரப்பட்ட சமூக பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வு குறைத்திருக்கிறது. 13.09.2021-ல் நீட் தேர்வை ரத்து செய்யும் சட்ட முன்வடிவை முன்மொழிந்தேன். அதைத் தொடர்ந்து நீட் தேர்வு விலக்கு மசோதாவை கவர்னருக்கு அனுப்பி வைத்தோம். மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் கவர்னர் அரசியல் செய்தார். நீட் தேர்வு விலக்கு தொடர்பாக கவர்னர், பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.
08.02.2022-ல் இரண்டாவது முறையாக நீட் விலக்கு சட்ட முன்வடிவு நிறைவேற்றி அனுப்பப்பட்டது. நீட் விலக்கு போராட்டத்தில் அடுத்த கட்டமாக நீட் விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம். நீட் தேர்வை ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க. எதிர்த்து வருகிறது. தமிழ்நாடு, மருத்துவத் துறையில் நாட்டுக்கே முன்னோடியாக விளங்கி வருகிறது.
நீட் தேர்வு விலக்கு அளிக்க முடியாத தேர்வு அல்ல. உச்ச நீதிமன்ற தீர்ப்பு மாபெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. சட்டப் போராட்டத்தை தொய்வின்றி நடத்தினால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கத்தான் அனைத்து கட்சி கூட்டம். நீட் தேர்வை ரத்து செய்யும் தமிழ்நாடு அரசின் போராட்டம் எந்த வகையிலும் முடிவுக்கு வரவில்லை." என்று அவர் கூறியுள்ளார்.