NEET impersonation issue : நீட் ஆள்மாறாட்ட விவகாரம் : தேனியை சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் நீட் தேர்விற்காக ஆள்மாறாட்டம் செய்திருப்பதாக அவர் படித்த கல்லூரி முதல்வர் எடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். அவருடைய பெற்றோர்கள் திருப்பதியில் கைது செய்யப்பட்டு, சென்னை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் துணை முதல்வர் எழிலரசன் ஆகியோரையும் விசாரணை செய்தது சி.பி.சி.ஐ.டி. இது போன்ற விவகாரங்களால், இந்த ஆண்டும் இதற்கு முந்தைய 2 ஆண்டுகளிலும் நீட் தேர்வின் மூலமாக படிக்க வந்தவர்களின் அனைத்து ஆவணங்களையும் சோதனை செய்யும் பணி முடிக்கிவிடப்பட்டுள்ளது. அதே போன்று கோவை பி.எஸ்.ஜி. மெடிக்கல் காலேஜிலும் இருவர் ஆள்மாறாட்டம் செய்திருக்கலாம் சந்தேகிப்பதாக அக்கல்லூரி முதல்வர் அறிவித்திருந்தார்.
சத்ய சாய் மருத்துவக்கல்லூரி மாணவி அபிராமி அவருடைய தந்தை மாதவன், பாலாஜி மருத்துவக்கல்லூரி மாணவர் பிரவீன் அவருடைய தந்தை சரவணன், எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மாணவர் ராகுல் மற்றும் அவருடைய தந்தை டேவிட் என நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களை அழைத்து விசாரணை செய்து வருகிறது காவல்துறை. இவர்கள் அனைவரும் ஒரே நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் 20 லட்சம் ரூபாய் இடைத்தரகர் மூலமாக கைமாற்றி வேறொருவரை உதித் சூர்யாவிற்கு பதிலாக தேர்வெழுத வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர்கள் மீது குற்றச்சாட்டு!
இந்நிலையில் உதித் சூர்யாவிற்கு உதவியதாக பேராசிரியர்கள் வேல்முருகன், திருவேங்கடம் உள்ளிட்டோர் மீது தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார். தான் எழுதிய தேர்வின் ஹால்டிக்கெட்டை வைத்து தான் கலந்தாய்வில் பங்கேற்க முடியும். வேறொரு நபர் புகைப்படத்துடன் பொருந்திய ஹால்டிக்கெட்டை வைத்து, இவர் எப்படி கலந்தாய்வில் ஈடுபட முடியும் என்று தெரிவித்த அவர், இவருக்கு பின்னால் இருந்து உதவியவர்கள் யார்? கலந்தாய்வின் போது ஏற்பட்ட சிக்கல்கள் என்னென்ன என்பதை மேற்கொண்டு விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க : நீட் ஆள்மாறாட்ட விவகாரம்: ஒரு மாணவி உட்பட மேலும் 3 மாணவர்களிடம் விசாரணை
மேலும் 12ம் தேதி விடுப்பில் இருந்த உதித் சூர்யாவிற்கு ப்ரெசெண்ட் போடப்பட்டிருப்பதாகவும் புகாரில் மேற்கோள் காட்டியுள்ளார் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன். கானாவிலக்கு காவல் நிலையத்தில் இவர் புகார் அளித்துள்ளதால் அது மேலும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.சி.ஐ.டி மேற்கொண்டு வரும் போது ஏன் காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும் என்றும், துறை ரீதியாக நடவடிக்கை எடுத்திருக்கலாமே என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தன்னை பாதுகாத்துக் கொள்ளவே இது போன்ற நடவடிக்கைகளில் கல்லூரி முதல்வர் ஈடுபட்டு வருவதாகவும் சிலர் கூறுகின்றனர்.