scorecardresearch

நீட், ஜெய் ஹிந்த்… பாஜகவில் குழப்பம்; தலைவர்கள் இடையே முரண்பாடு!

நீட் தேர்வு மற்றும் ஜெய்ஹிந்த் விவாகாரங்களில் தமிழக பாகக தலைவர்கள் ஒருவருக்கொருவர் முரண்பாடான கருத்து தெரிவிப்பதும் பிறகு அதை சரி செய்யும் விதமாக கருத்து தெரிவித்துள்ளதாலும் குழப்பம் நிலவுகிறது.

நீட், ஜெய் ஹிந்த்… பாஜகவில் குழப்பம்; தலைவர்கள் இடையே முரண்பாடு!

தமிழ்நாட்டில் நீட் தேர்வு விவகாரம் மற்றும் ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் இல்லாதது தொடர்பாக தமிழக பாஜக தலைவர்கள் முரண்படான கருத்து தெரிவித்துள்ளதால் குழப்பம் நிலவி வருகிறது.

நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் இருந்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்து ஒரு மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமயில் குழு அமைத்து உத்தரவிட்டார். அந்த குழு மாநிலத்தில் பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில்தான், தமிழ்நாட்டின் 16வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் பாஜகவின் சட்டமன்றக் கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நீட் தேர்வில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பினார். அவருடைய கருத்துக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பேறவேண்டும் என்பது தான் திமுக, அதிமுகவின் நிலைப்பாடாகவுள்ளது.

எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அதே போல அமைச்சரவையிலும் முடிவு செய்திருக்கிறார்கள் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதைப் பற்றி விமர்சனம் செய்ய விரும்ப வில்லை எனவும், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்கும்போது அதற்கு பாஜக குரல் கொடுக்க தயாரா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

மு.க.ஸ்டாலினின் கேள்விக்கு பதில் அளித்த பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், சட்டத்திற்கு உட்பட்டு நீட் தேர்வுக்கு விலக்கு கோரினால் அதற்கு ஆதரவு தெரிவிப்போம் என்றார்.

இந்த நிலையில்தான், தமிழ்நாடு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கபட்ட குழுவுக்கு தடை விதிக்க கோரி இதற்கு தடை விதிக்க கோரி தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், “மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த 2019-ல் தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு எதிராக மாநில அரசு செயல்பட முடியாது. மருத்துவக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்கவேண்டும். ஆனால், அதைமீறும் வகையில் தமிழக அரசுகுழு அமைத்துள்ளது ஏற்புடையது அல்ல.

உச்ச நீதிமன்ற உத்தரவுஅடிப்படையிலும், தேசிய நலன் அடிப்படையிலும், நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. மாணவர்களிடம் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு இந்த விவகாரத்தை அரசியலாக்க நினைக்கிறது. எனவே, இக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்.” என்று கோரி இருந்தார்.

இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீட் தேர்வு நடைமுறைக்கு எதிராக மாநில அரசு குழு அமைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதற்குப் பதில் அளித்த தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், `தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என அரசின் தலைமை வழக்கறிஞரிடம் தெரிவித்தனர். குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பினர். இதையடுத்து அரசிடம் விளக்கம் பெற அவகாசம் கேட்கப்பட்டதால் வரும் ஜூலை 5ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

நீட் தேர்வு விவகாரத்தில் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், “NEET போன்ற தேர்வுகள் சிறந்த மருத்துவர்களை உருவாக்கும். சில எதிர் கட்சிகள் பின அரசியல் செய்கின்றன.” என்று செப்டம்பர் 14,2020-ல் டிவிட் செய்த பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பின் செய்துள்ளார். இப்படி, நீட் தேர்வு விவகாரத்தில், சட்டத்திற்கு உட்பட்டு பாஜக் ஆதரவு அளிக்கும் என்று நயினார் நாகேந்திரன் கூறிய நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது ஒரு புறம் இருக்க, தமிழ்நாடு 16வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் பேசிய ஆளுநர் உரையின் முடிவில் ஜெய்ஹிந்த் என்ற வாசகம் இடம்பெறவில்லை. இதுதான், அதிமுக அரசுக்கும் திமுக அரசுக்குமான வித்தியாசம். தமிழ்நாடு தலைநிமிர்ந்துவிட்டது என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளரும் திருச்செங்கோடு எம்.எல்.ஏ.,வுமான ஈஸ்வரன் சட்டப்பேரவையில் பேசினார். ஈஸ்வரனின் பேச்சுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக, காங்கிரஸ் கட்சியினர் ஈஸ்வரனை சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்தனர்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், “இதுவரை மத்திய அரசு என்று சொல்லிவிட்டு தற்போது ஒன்றிய அரசு என்று சொல்லுவதில் சொல்லில் குற்றமில்லை அவர்களின் பொருளில் குற்றம் உள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி இரட்டை வேடம் போடவில்லை. நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது. நீட் தேர்வு விவகாரம் தற்போதைக்கு முடியக்கூடிய விவகாரம் இல்லை. நீட் தேர்வு சம்பந்தப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீட் தேர்விற்கு தற்போது விலக்கு கிடைக்காது என்பது தெரிந்தும் திமுக அரசு இப்படி சொல்லி வருவது மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்தும். ஜெய்ஹிந்த் என்பது நமது நாடு நமது தேசம் அதன் மீதுள்ள பற்றை வெளிப்படுத்துகிறது. ஜெய்ஹிந்த் என்றால் தாய் நாடு வெற்றி பெற வேண்டும் என்பது பொருள். தனது தாய் நாடு வெற்றி பெற வேண்டும் என்று சொல்வதில் அவருக்கு தயக்கம் என்று சொன்னால் அவர்கள் எந்த நாட்டில் சென்று வாழப் போகிறார்கள். ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை சட்டமன்றத்தில் சொல்லித்தான் புரிய வைக்க வேண்டும் என்ற தேவை இல்லை” என்று தெரிவித்தார்.

ஆனால், ஜெய்ஹிந்த் விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கையில், “ஜெய்ஹிந்த் கோஷத்தை இழிவுபடுத்திய, திமுக எம்எல்ஏ சார்பில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், பகிரங்கமாக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். வருகின்ற காலங்களில் தமிழக சட்டப்பேரவையில், பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏக்கள், பாரத் மாதாகி ஜெய், வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் போன்ற முழக்கங்களைத் தொடர்ந்து எழுப்புவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். ஆனால், பாஜகவின் சட்டமன்றக் கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை சட்டமன்றத்தில் சொல்லித்தான் புரிய வைக்க வேண்டும் என்ற தேவை இல்லை என்று தெரிவித்திருப்பது பாஜக தலைவர் எல்.முருகன் கருத்தில் இருந்து சிறிது முரண்படும் விதமாக அமைந்துள்ளது.

இப்படி நீட் தேர்வு மற்றும் ஜெய்ஹிந்த் விவாகாரங்களில் தமிழக பாகக தலைவர்கள் ஒருவருக்கொருவர் முரண்பாடான கருத்து தெரிவிப்பதும் பிறகு அதை சரி செய்யும் விதமாக கருத்து தெரிவித்துள்ளதாலும் குழப்பம் நிலவுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Neet jaihind controversy bjp leaders nainar nagenthran and l murugan different opinion

Best of Express