நீட் தமிழ் வினாத்தாள் குளறுபடி
நீட் தமிழ் வினாத்தாளில் குளறுபடி உள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், 196 மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக இன்று கூறியுள்ளது. இந்தாண்டு கூடுதலாக சலுகை மதிப்பெண்கள் அளிக்க உத்தரவிட முடியாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2018ம் ஆண்டு நீட் தேர்வு தமிழ் மொழி வினாத் தாளில் 49 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருந்தது. எனவே தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மதுரை கிளை உயர்நீதிமன்றம், தமிழக மாணவர்களுக்குச் சாதகமாக தீர்ப்பளித்தது. இதில், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஒரு கேள்விக்கு தலா 4 மதிப்பெண் வீதம், 49 கேள்விகளுக்கு மொத்தமாக 196 மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இ-க்கு உத்தரவு அளித்தது.
மேலும் கூடுதல் மதிப்பெண் வழங்கி, 2 வாரத்திற்குள் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும், அதுவரை மருத்துவ கலந்தாய்வு நடைபெறக் கூடாது என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து, சிபிஎஸ்இ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “நீட் விவகாரத்தில் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம். தமிழகஅரசு பரிந்துரைத்த அதிகாரப்பூர்வ மொழி பெயர்ப்பாளர்கள்தான் நீட் வினாத்தாளை தமிழில் மொழி பெயர்த்தனர்” என்று சிபிஎஸ்இ குறிப்பிட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கருணை அடிப்படையில் வழங்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த ஆண்டு நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க இயலாது என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.