மழை வெள்ள பாதிப்புகளுக்கு இடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோ ஷூட் நடத்தியதாக வெளியாகி உள்ள வீடியோ நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் சென்னை மாநகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது.
சென்னையில் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. பல்வேறு பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து தமிழக அரசு மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது. கடந்த 2 நாட்களாக தமிழக முதல்வர் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு நிவாரணம் வழங்கி வருகிறார். இதேபோல் எதிர்கட்சித்தலைவர் மற்றும் பிற கட்சி தலைவர்களும் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரணம் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். அப்போது படகு மூலம் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். இதனிடையே நெட்டிசன் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பாஜக தலைவர் அண்ணாமலை மழை வெள்ள பாதிப்புகளை படகு மூலம் பார்வையிடுகையில், அதனை வீடியோ எடுப்பதற்காக படகின் பொஷிசனை சரி செய்வதாக வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், சிறந்த நிவாரணப்பணி என விமர்சித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil