பணியில் இல்லாத வி.ஏ.ஓ-க்கள் உடனடி சஸ்பெண்ட் - நெல்லை ஆட்சியர் ஷில்பா அதிரடி ஆடியோ!

திருநெல்வேலி கலெக்டர் ஷில்பா சதீஷ் பிரபாகர் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு கிசான் யோஜனா என்ற திட்டத்தின் மூலம் ரூ.6000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்ற மக்கள், அங்கு அலுவலர் இல்லாததால், ஆட்சியர் அலுவலகத்து வருவதாக அந்த ஆடியோவில் மிகுந்த கோபத்துடன் பேசியிருக்கிறார்.

“கிசான் யோஜனா திட்டத்துக்காக ஆட்சியர் அலுவலகத்துக்கு நிறைய அப்ளிகேஷன் வருது. 2 வயசானவங்க வந்து இங்க மனு குடுக்குறாங்க. ஏன்னு கேட்டா, வி.ஏ.ஓ ஆஃபிஸ்க்கு போனா, அங்க 2 நாளா வி.ஏ.ஓ இல்லன்னு சொல்றாங்க. உங்களுக்கு இந்த ஒரு சின்ன வேலைய கூட செய்ய முடிலயேன்னு, உங்க யாரோட பெர்ஃபார்மென்ஸும் எனக்கு திருப்தி தரல. காலைல இருந்து இரவு வரை வி.ஏ.ஓ-க்கள் இருந்து, கண்டிப்பா அப்ளிகேஷன்கள வாங்கனும். நீங்க மனு வாங்காம எனக்கு ரிப்போர்ட் குடுக்குற வேலை எல்லாம் வேண்டாம்.

நா எந்த கிராமத்த கடந்து போனாலும், அங்க நான் சோதனைக்கு வருவேன். அந்த கிராமத்தோட டேட்டா எனக்கு அப்போவே வேணும். முக்கியமா வி.ஏ.ஓ ஆஃபிஸ்ல இருக்கணும். நான் வர்ற கிராம அலுவலகத்துல வி.ஏ.ஓ இல்லன்னா, அது யார்னாலும் சரி, நான் அப்போவே சஸ்பெண்ட் பண்ணிடுவேன்.  அத பத்தி நான் கவலையும் பட மாட்டேன். நான் வரும் போது யாருக்கெல்லம் பணம் கிடைக்க தகுதி (எலிஜிபிள்) இருக்கு, இல்லைங்கற லிஸ்டும் உங்க கைல இருக்கனும். அந்த லிஸ்ட் படி யார் யார நீங்க போய் பாத்துருக்கீங்கங்கறதையும் நான் கிராஸ் செக் பண்ணுவேன். ஆஃபிஸ்ல இல்லாமயோ, லிஸ்ட் இல்லாமயோ யாராச்சும் இருந்தீங்கன்னா, அந்த ஸ்பாட்லயே சஸ்பெண்ட் தான். இத மத்த வி.ஏ.ஓ-க்களுக்கும் தெரியப்படுத்துங்க” என்று அந்த ஆடியோவில் எச்சரிக்கை விடுத்துள்ளார் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பாவின் இந்த எச்சரிக்கைக்கு பெரும் வரவேற்பு அளித்து வருகிறார்கள் நெல்லை மக்கள். ”ஏழை விவசாயிகளுக்கு ஆதரவளிக்காமல், வேலை செய்யாமல் இருக்கும் பல கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஏற்ற எச்சரிக்கை. உங்கள் பணி தொடரட்டும்”

”திருநெல்வேலி மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO)க்கள் தங்கள் பணி செய்ய ஊரில் இல்லாவிட்டால் சஸ்பெண்ட் நெல்லை ஆட்சியரின் இந்த கடும் எச்சரிக்கையை வரவேற்கிறோம்” என ட்விட்டரிலும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்துக் கொண்டிருக்கின்றன.

முன்னதாக தனது குழந்தையை அரசு அங்கன்வாடியில் சேர்த்து, பலரின் பாராட்டுகளையும் இவர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close