நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து புதூரைச் சேர்ந்த கே.பி.கே ஜெயக்குமார் தனசிங் (வயது 60). காண்டிராக்டர் தொழிலும் ஈடுபட்ட வந்த இவர் கடந்த 4 ஆம் தேதி காலையில் தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு உடல் கருகிய நிலையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
விசாரணை
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக, நெல்லை மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் மேற்பார்வையில் 11 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜெயக்குமார் தனசிங் இறப்பதற்கு முன்பாக எழுதிய கடிதங்களைக் கைப்பற்றிய போலீசார், அதில் குறிப்பிட்டுள்ள நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஜெயக்குமார் தனசிங் குடும்ப உறுப்பினர்கள், வீட்டு பணியாளர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்டவர்களிடமும் விசாரித்தனர். மேலும், அவர் எப்படி இறந்தார் என்பது குறித்த உறுதியான தகவல் தெரியாததால் போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி வருகிறார்கள். இது தொடர்பாக சம்பவ இடங்களில் இருந்து தடயங்களை சேகரிக்கும் பணியில் தடயவியல் புலனாய்வு துறை நிபுணர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம்
இந்த நிலையில், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்து தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 11 தனிப்படைகள் நடத்திய விசாரணையில் இதுவரை எந்த துப்பும் கிடைக்காததால் வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது. ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக 36 நபர்களிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“