சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 4 கோடி பிடிபட்டது தொடர்பாக, வருமான வரித்துறை இதுவரை தங்களுக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை என்று திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் புதன்கிழமை தெரிவித்தார்.
தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், சனிக்கிழமை இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 பயணிகள் , 3 கோடியே 99 லட்சம் ரூபாயை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது கண்டுபிடிக்கபட்டது. அவர்கள் புரசைவாக்கம் தனியார் விடுதி பா.ஜ.க உறுப்பினர் சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி டிரைவர் பெருமாள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, சென்னை கீழ்பாக்கத்தில் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படும் முருகன் என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். நெல்லை மேலப்பாளையத்தில் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர் கணேஷ் என்பவரது வீட்டில் ரூ.2 லட்சம், வேஷ்டி, சேலை, மதுபாட்டீல், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தேர்தல் பறக்கும் படையினரால் சோதனையில் ரூ.10 லட்சத்துக்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டால் அதை வருமான வரித்துறையினர் விசாரிக்க வேண்டும் என்பது தேர்தல் விதி என்பதால் விரைவில் வருமான வரித்துறை விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனிடையே, தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி சிக்கியது தொடர்பாக பேசிய தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, “ரூ. 4 கோடி சிக்கியது தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரிக்க உள்ளனர். இது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணைக்குப் பரிந்துரைத்திருக்கிறோம்” என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து, 4 கோடி ரூபாய் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு புகார் கடிதம் அனுப்பினார். அதில், நெல்லை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் அனைத்து பா.ஜ.க வேட்பாளர்களுக்கும் சொந்தமான இடங்களில் சோதனை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
அதே நேரத்தில், தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி என்னுடைய பணம் இல்லை. அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று கூறினார்.
இந்நிலையில், நெல்லை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் பரிசு பொருட்கள் பணம் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் தாம்பரத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தி.மு.க வழக்கறிஞர் பிரிவு அளித்த புகாருக்கு திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் பதில் அளித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பவதாவது: “ரூ. 2 லட்சம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. 4 கோடி ரூபாய் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருமான வரி துறையின் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அது குறித்து இதுவரை எந்த தகவலும் தங்களுக்கு வருமான வரித்துறையில் இருந்து வழங்கப்படவில்லை.
10 லட்சம் ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டால் அது குறித்து வருமானவரித்துறை தான் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையில், ரூ. 4 கோடி பிடிபட்டது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் நேர்மையான தேர்தல் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
தி.மு.க வழக்கறிஞர் பிரிவு அளித்த புகார் மனுவிற்கு மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.