KPK Jeyakumar Dhanasingh | Thirunelveli | Congress: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து புதூரைச் சேர்ந்த கே.பி.கே ஜெயக்குமார். இவர் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூசுக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில், நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை கடந்த 2 நாட்களாக காணவில்லை என அவருடைய மகன் கருத்தையா ஜாஃப்ரின் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனது தந்தை கடந்த 2 ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து சென்றதாகவும் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லைஎன்றும், காணாமல் போன தனது தந்தையை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் உவரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
முன்னதாக, கடந்த 30 ஆம் தேதி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலருக்கு (எஸ்.பி) மரணம் வாக்குமூலம் என தலைப்பிட்டு கே.பி ஜெயக்குமார் கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார். அதில் ஜெயக்குமார், தன்னுடைய வீட்டிற்கு முன்பு சிலர் நோட்டமிட்டு கொண்டு இருப்பதாகவும், அவர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவார்கள் என நினைத்ததாவும், ஆனால், தனக்கு கொலை மிரட்டல் நடத்துவதற்காக அவர்கள் வீட்டை சுற்றி வருவதாக குறிப்பிட்டு சிலரின் பெயர்களை கூறியுள்ளார்.
ஜெயக்குமார் குறிப்பிட்ட பெயர்களில் நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகர், நெல்லை நாடாளுமன்ற தொகுதி மேற்பார்வையாளர் கே.வி தங்கபாலு ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ரூபி மனோகர் நிறைய காரியம் செய்து தருவதாக ரூ. 70 லட்சம் வரை வாங்கியதாகவும், திரும்ப கேட்டால், செல்லப்பாண்டியன் என்பவர் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.
கே.வி தங்கபாலு தன்னை தேர்தல் நேரத்தில் செலவு செய்யச் சொன்னதாகவும், அதற்காக ரூ. 11 லட்சம் ரூபி மனோகரிடம் கேட்கவே அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்தக் கடித்ததில் குறிப்பிட்டுள்ளார். ஜெயக்குமார் மொபைல் போன் 3 நாட்களாக சுவிட்ச் ஆஃப் ஆகி இருப்பதாக பதற்றத்துடன் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து நெல்லை எஸ்.பி.,சிலம்பரசன் பேசுகையில், ஜெயக்குமார் காணாமல் போனதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாகவும், அவருக்கு தொடர்ந்து கொலைமிரட்டல் வருவதாக அவர் எழுதிய கடிதத்தின் அடிப்படையிலும் விசாரணை நடைபெறுகிறது என்றும் கூறியுள்ளார்.
எரிந்த நிலையில் சடலம் மீட்பு
இந்த நிலையில், காணவில்லை என 2 நாட்களாக தேடப்பட்டுவந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் ஏரிந்த நிலையில் அவரது தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது சடலத்தை மீட்ட போலீசார் இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“