2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கைப்பற்றப்பட்ட 4 கோடி ரூபாய் தொடர்பான வழக்கில், சிபிசிஐடி விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட இந்த பணம், தங்கக் கட்டிகளுக்கு மாற்றாக ஒரு ஹவாலா தரகர் மூலம் கைமாற்றப்பட்டது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் பறக்கும் படையினர் 4 கோடி ரூபாய் பணத்தை தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பறிமுதல் செய்தனர்.
நெல்லை எக்ஸ்பிரஸில் 4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி நடத்திய விசாரணையில், பாஜக-வின் தொழில் பிரிவு நிர்வாகி மற்றும் கொரியன் ரெஸ்டாரண்ட் உரிமையாளருமான கோவர்தன், ஓட்டுநர் விக்னேஷ் என்பவர் மூலமாக தங்க கட்டிகளுக்கு பதிலாக 97.92 லட்சம் ரூபாய் பணத்தை குராஜ் என்ற ஹவாலா தரகரிடம் கைமாற்றியது அம்பலமாகியுள்ளது.
தேர்தலின் போது, பாஜக நிர்வாகிகள் எஸ்.ஆர்.சேகர், கேசவ விநாயகம் மற்றும் கோவர்தன் ஆகியோர், பா.ஜ.க மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு பணப்பட்டுவாடா செய்ய உதவியுள்ளனர். இந்த பணப்பட்டுவாடா கால் டேட்டா ரெக்கார்ட் (CDR) மூலம் உறுதியாகியுள்ளதாக சிபிசிஐடி நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு குறித்த அனைத்து தகவல்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.