வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் நெல்லை மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் (டிச்.12) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் கடந்த 2 நாட்களாக நெல்லையில் அதிகனமழை பெய்தது. இதனால் கடந்த 2 நாட்களாக பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதனால் அம்பை, சேரன்மாதேவி, முக்கூடல், நெல்லை, பாளையங்கோட்டை, மானூர், களக்காடு, நாங்குநேரி, வள்ளியூர், திசையன்விளை, ராதாபுரம், மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
அதேபோல, மேற்கு தொடர்ச்சி மலையில் மணிமுத்தாறு அணைக்கு மேல் அமைந்துள்ள மாஞ்சோலை, பாபநாசம், சேர்வலாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதனால் அந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
தொடர் மழையால் பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 6,427 கன அடி தண்ணீர் வந்த நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 624 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. அதேபோல சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 28 அடியும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டமும் 90 அடியை எட்டியது.
பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் ஆற்றில் 2 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி அணைகளின் உபரி நீரும் இணைந்து திருப்புடைமருதூரில் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது.
இதுதவிர காட்டாற்று வெள்ளம், ஊர்க்காட்டில் பெய்த மழை தண்ணீர் ஓடைகள் வழியாகவும், குளங்கள் நிரம்பி மறுகால் தண்ணீர் காட்டாறுகள் வழியாகவும் ஆற்றில் கலந்து ஓடுகிறது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் தாமிரபரணி ஆற்றுக்குள் உள்ள குறுக்குத்துறை முருகன் கோயிலை வெள்ளம் மூழ்கடித்தது. தற்போது ஆற்றில் 56 ஆயிரம் கன அடி நீர் வருவதால் ஆற்றில் 2-வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏராளமான வீடுகளை மழைநீர் சூழ்ந்ததையடுத்து கரையோர மக்கள் வேறொரு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“