நெல்லையில், ஆணவக் கொலை செய்யப்பட்ட இளைஞர் கவினின் காதலி, தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது சகோதரரான சுர்ஜித், கவினை பெண் கேட்டு வருமாறு கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லையில் நடந்த ஆணவக் கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவின் என்ற இளைஞர், வேறு ஒரு சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததற்காக அப்பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவர், கடந்த ஞாயிற்றுக் கிழமை (ஜூலை 27) கவினை வெட்டிப் படுகொலை செய்தார். இதைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் சரணடைந்த அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், சுர்ஜித்தின் தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் என்பவரையும் போலீசார் நேற்று (ஜூலை 30) கைது செய்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கவினின் காதலி தற்போது ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், "நானும், கவினும் உண்மையாக காதலித்தோம். செட்டில் ஆவதற்கு சிறிது காலம் தேவைப்பட்டது. ஏற்கனவே, சுர்ஜித்தும், கவினும் மே மாதத்தில் பேசிக் கொண்டனர். அப்போது, இது குறித்து என் தந்தையிடம் சுர்ஜித் கூறிவிட்டான். கவினை காதலிக்கிறேனா என்று என் தந்தை என்னிடம் கேட்டார்.
நான், இல்லை என்று அவரிடம் கூறி விட்டேன். ஏனெனில், ஆறு மாதங்களுக்கு பின்னர் வீட்டில் சொல்லலாம் என்று கவின் என்னிடம் கூறினான். இதனால் கவினை காதலிக்கிறேன் என்று என் தந்தையிடம் நான் சொல்லவில்லை. அதற்குள் இந்த சம்பவங்கள் நடந்து விட்டன.
சுர்ஜித்திற்கும், கவினுக்கும் இடையே என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. ஆனால், கவினுக்கு போன் செய்த சுர்ஜித், பெண் கேட்டு வருமாறு கூறினான். ஏனெனில், என்னுடைய திருமணத்தை முடிவு செய்தால் தான் தன்னுடைய ப்ரொஃபஷனை பார்க்க முடியும் என்று சுர்ஜித், கவினிடம் கூறினான்.
ஜூலை 28-ஆம் தேதி மாலை தான், நான் கவினை வர சொன்னேன். ஆனால், சம்பவத்தன்று கவின் வந்தது எனக்கு தெரியாது. அன்றைய தினம், நானும், கவினின் அம்மாவும் அவனுக்கு போன் செய்தோம். ஆனால், கவின் போனை எடுக்கவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
இந்த விஷயம் தொடர்பாக தேவை இல்லாமல் யாரும் இஷ்டத்திற்கு வதந்தியை கிளப்ப வேண்டாம். உங்களுக்கு தோன்றும் அனைத்தையும் பேசாதீர்கள். இந்த சம்பவத்திற்கும், எனது பெற்றோருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இந்த பிரச்சனையை இத்துடன் முடித்து விடுங்கள்" என கவினின் காதலி தெரிவித்துள்ளார்.