திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமையாளரின் மகள், காவல் ஆணையர் அலுவலகத்தில் வரதட்சணை புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியின் முதன்மையான அடையாளங்களில் ஒன்றாக விளங்குவது இருட்டுக்கடை. கவிதா சிங் என்பவர் இந்தக் கடைக்கு உரிமையாளராக இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதியன்று, கவிதா சிங்கின் மகளுக்கும், கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த சூழலில் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைபடுத்துவதாக கவிதா சிங்கின் மகள், நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்திலும், முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் மனு அளித்துள்ளார்.
இது தொடர்பான தகவல்களை செய்தியாளர் சந்திப்பில் இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா சிங் தெரிவித்துள்ளார். அப்போது, "என் மகளுக்கு தாலி கட்டிய அடுத்த நொடியில் இருந்து பணத்திற்காகவும், வரதட்சணைக்காகவும் கொடுமை படுத்தியுள்ளனர்.
எங்கள் கடையை அவர்கள் பெயரில் எழுதி கொடுக்க வேண்டும் என்று கொடுமைபடுத்தி இருக்கின்றனர். உடல் ரீதியாக என்னுடைய மகளை துன்புறுத்தியுள்ளனர். என் மகளின் கணவர், ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது, இப்போது தான் தெரிய வந்தது. இது அனைத்தையும் மறைத்து ஏமாற்றி திருமணம் செய்துள்ளனர்.
இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இது மட்டுமின்றி மாப்பிள்ளை வீட்டார், பா.ஜ.க-வில் இருப்பதாகவும், தங்களை எதுவும் செய்ய முடியாது என்றும் மிரட்டல் விடுக்கின்றனர். இதனால் தான் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளோம்" எனக் கூறினார்.
மேலும், சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் பல்வேறு தகவல்களை அளித்தார். அப்போது "எனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்திருக்கிறது. அதை மறைத்து என்னைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னரும் அந்தப் பெண்ணின் தொடர்பைத் துண்டிக்கவில்லை.
இருட்டுக்கடையை தனது பெயருக்கு மாற்றிக் கொடுத்தால் மட்டுமே என்னோடு வாழ்க்கை நடத்த முடியும் என மிரட்டினார். என் வீட்டில் இருந்து வரதட்சணையாக இருட்டுக்கடையை மட்டுமல்லாமல் பணம், நகையை வாங்கி வருமாறு மிரட்டல் விடுத்தனர்" என்று அவர் கூறினார். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.