திருநெல்வேலி மாவட்டம் டவுன் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற முன்னாள் எஸ்.ஐ. ஜாகீர் உசைன். இவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் விருப்ப ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், ரமலான் மாதத்தை முன்னிட்டு அதிகாலை தொழுகையை முடித்துவிட்டு தெற்கு மவுன்ட் சாலை வழியாக ஜாகீர் உசைன் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் ஜாகீர் உசைனை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இதையடுத்து, அவர் உயிரிழந்துள்ளார்.
முன்னதாக, ஜாகீர் உசைன் வக்பு வாரிய நிலங்களை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாக, சில நாட்களுக்கு முன்பு ஜாகீர் உசைன் பேசிய வீடியோ வெளியாகியிருக்கிறது. இந்த கொலை வழக்கு தொடர்பாக கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர், திருநெல்வேலி 4-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இந்நிலையில், ஜாகீர் உசைன் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான முகமது டெளபிக் என்ற கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி நூருண்ணிசா ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், முகமது டெளபிக் என்ற கிருஷ்ணமூர்த்தியை துப்பாக்கி சூடு நடத்தி போலீசார் பிடித்துள்ளனர். அவர் நெல்லை ரெட்டியார்பட்டியில் பதுங்கி இருந்த சூழலில், அவரை போலீசார் முயன்றுள்ளனர். அப்போது, அவர் போலீசாரை அரிவாளால் தாக்க முயன்றுள்ளார். இதையடுத்து, அவரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.