பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து பேச்சாளர் நெல்லை கண்ணன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நெல்லை கண்ணன் பெரம்பலூரில் போலீசாரால் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள், பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?
நெல்லை கண்ணன் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்படி தமிழக பாஜகவினர் கைது செய்தே ஆக வேண்டும் என்று கொந்தளிக்கும் அளவுக்குக்கு பேசிய நெல்லை கண்ணன் யார் என்பதை தெரிந்துகொள்வோம்.
நெல்லை கண்ணன் தமிழகம் அறிந்த பட்டிமன்றம் மற்றும் கருத்தரங்க பேச்சாளர். 1946 ஆம் ஆண்டு ந.சு.சுப்பையா பிள்ளைக்கும் லக்குமி அம்மையாருக்கும் 4வது மகனாக பிறந்தார். இவருடைய குடும்பம் நெல்லையை பூர்வீகமாகக் கொண்டது. விவசாயக் குடும்பத்தில் பிறந்த நெல்லை கண்ணன் தமிழ் மொழி மீது ஆர்வமும் பாரதி பாடல் மீது தனியாத ஈடுபாடும் கொண்டவர். தமிழ் இலக்கியத்தை கற்றுத்தேர்ந்த நெல்லை கண்ணன் தனது பேச்சாற்றல் மூலம் பல பட்டிமன்றங்களில் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டவர். அரசு தொலைக்காட்சியில் பலமுறை பட்டிமன்ற நடுவராக இருந்தார்.
நெல்லை கண்னன் காங்கிரஸ் கட்சியில் தீவிர ஈடுபாடு கொண்டவர். இளம் வயது முதல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கட்சிப் பணியாற்றினார். பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் போது இவருக்கு திருநெல்வேலி தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இரு முறை திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
நெல்லை கண்ணன் தமிழகத்தில் 1996-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டவர் என்ற பெயருக்கு சொந்தக்காரர். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தபோது அவர் வருகைக்கு முன் நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றி கூட்டத்தினரை கட்டிப்போட்டு தனது மடைதிறந்த வெள்ளமான உரையைக் கேட்கவைத்தவர்.
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தநேரத்தில், அவர் பிரசாரத்திற்காக நெல்லை வந்தபோது நெல்லை கண்ணன் வீட்டில்தான் மதிய உணவு சாப்பிட்டார் என்று கூறுவர். அதுமட்டுமில்லாமல், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, கே.வி.தங்கபாலு ஆகியோருடன் நெல்லை கண்ணன் நெருக்கமான நட்பு கொண்டவர்.
இப்படி ஒரு காங்கிரஸ்காரராக அறியப்பட்ட நெல்லை கண்ணன் 2001-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அ.தி.மு.கவில் இணைந்தார். ஆனால், அவரால் அ.தி.மு.கவில் நீண்டநாட்கள் நீடிக்க முடியவில்லை. ஒரு ஆண்டுக்குப் பிறகு அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார்.
அரசியலில் தீவிரமாக செயல்பட்டாலும் அவரால் தேர்தல் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை. இருப்பினும், நெல்லை கண்ண்ணன் தொடர்ந்து, பட்டிமன்றம், இலக்கியம், சமய சொற்பொழிவு நிகழ்த்தி வந்தார். மேலும், தனியார் தொலைக்காட்சி நடத்திய பேச்சாளர்களை உருவாக்கும் நிகழ்ச்சியில் நடுவராகவும் கலந்து கொண்டார்.
தற்போது 75 வயதை நெருங்கும் நெல்லை கண்ணன் தனது பேச்சாற்றலால் பட்டிமன்றங்களிலும், இலக்கிய கருத்தரங்குகளிலும் அரசியல் மேடைகளிலும் தனிமுத்திரை பதித்து வலம்வருகிறார். தற்போது ஒரு பேட்டியில், தன்னை அடிப்படையில் ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறினார். அசுரன் படத்திற்கு வசனம் எழுதிய சுகா நெல்லை கண்ணனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான், அரசியல் மேடைகளில் அரிதாக பேசிவந்த நெல்லை கண்ணன், கடந்த ஞாயிற்றுக்கிழமை மேலப்பாளையத்தில் நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வீடியோ வெளியானது. இதையடுத்து பாஜகவினர் அவர் மீது புகார் அளித்தனர்.
பாஜகவின் புகாரைத் தொடர்ந்து, நெல்லை கண்ணன் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகள் உள்பட மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதோடு விடாமல், நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினர் நெல்லையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று சென்னை மெரினாவில் பாஜகவின் மூத்த தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, அவருக்கு உடல்நிலை சரியில்லையென சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த நிலையில், பெரம்பலூரில் புதன்கிழமை இரவு நெல்லை கண்ணனை ஒரு தனியார் ஹோட்டலில் பெரம்பலூர் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.