Nellai kannan emotional speech at VCK award function: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விழாவில் கண்ணீர் விட்ட நெல்லைக் கண்ணனின் பேச்சு சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 2021-ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது. விழாவிற்கு அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.
இவ்விழாவில் அம்பேத்கர் சுடர் விருது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், பெரியார் ஒளி விருது மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும், காமராசர் கதிர் விருது நெல்லை கண்ணனுக்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது காரியமாலுக்கும், காயிதே மில்லத் பிறை விருது பஷீர் அகமதுக்கும், செம்மொழி ஞாயிறு விருது ராமசாமிக்கும் வழங்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விருது வழங்கும்போது, இந்திய அரசியலமைப்பு சட்ட கோட்பாடுகள் குறித்து அம்பேத்கர் கையால் எழுதிய படிவம், புத்தர் சிலை, 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருமாவளவன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், என்னைத் தேர்ந்தெடுத்து அம்பேத்கர் விருதை பெற்றுக்கொள்ள வேண்டும் என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்தார், அவருடைய அன்புக்கு நான் என்றுமே கட்டுப்பட்டவன் தான் இதற்குமேல் எவ்விளக்கவும் கொடுக்கவேண்டியதில்லை எனக்கூறிய முதல்வர் ஸ்டாலின், தனக்கு இவ்விருதினை தருகிறேன் என்று அவர் சொன்னபோது எனக்கு அச்சமிருந்தது, அம்பேத்கரின் விருதினை பெரும் அளவிற்கு தான் சாதனை செய்யவில்லை தனது கடமையைத்தான் செய்தேன்.
மாநில ஆதிதிராவிடர் ஆணையம், பஞ்சமி நிலம் மீட்பு, அயோத்திதாசர் மணிமண்டபம் என பலவற்றைச் செய்தாலும் அவற்றை எல்லாம் செய்யத் தான் தி.மு.க ஆட்சிக்கு வந்துள்ளது என்பதே உண்மை. கலைஞர் வழி வந்தவன் நான் அவரின் மகன் என்பதில் பெருமைகொள்பவன். அண்ணல் அம்பேத்கர் சட்டக்கல்லூரி எனப் பெயரிட்டவர் கலைஞர் தான். மராட்டியத்தை விட அம்பேத்கர் புகழை அதிகமாகத் தமிழகத்தில் பரப்பியது திராவிட இயக்கம் தான்.
அம்பேத்கருக்கு நிகரான தலைவர் இந்தியாவில் யாருமில்லை, அம்பேத்கர் பெயரிலான விருதினை பெரியார் திடலில் வைத்து வாங்குவதைவிட வேறென்ன பெருமை கிடைத்துவிடப் போகிறது?, முதன்முதலில் முதலமைச்சராக கலைஞர் பதவியேற்றபோது ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கென தனித்தனி துறையை உருவாக்கினார், பல்வேறு திட்டங்களை கலைஞர் செய்தார், அவருடைய சாதனையின் தொடர்ச்சியாகத்தான் இந்த ஆட்சி நடைபெறுகிறது.
வன்கொடுமை நடக்ககூடாது என்பது தான் எங்கள் கொள்கை. சமூக பாகுபாடுகள் இம்மண்ணில் பேதம் கூடாது இது தான் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை. சட்டத்தினால் அனைத்தையும் திருத்திவிட முடியாது மனமாற்றம் தேவை. அதே நேரத்தில் மனமாற்றம் தேவை என்று விட்டுவிடக்கூடாது சட்டங்கள் அதற்கு தேவை. சமூக நல்லிணக்கம் இல்லாத மாநிலத்தில் மற்ற முயற்சிகள் எல்லாம் வீண் தான். சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கவேண்டும் இல்லையென்றால் அவற்றை புறம்தள்ளவேண்டும் என தொழிலதிபர்கள் மாநாட்டில் பேசினேன். பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கருத்துகளை ஏற்றுக்கொண்டுள்ள நான் அவர்களின் வாழ்க்கையைப்போல் என் வாழ்க்கைய வடிவமைத்துக் கொள்வேன் என உறுதி கூறுகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
அடுத்து பேசிய நெல்லை கண்ணன், ‘திருமாவின் மேடையில் மடிந்தால் திருமாவின் மடியில் தானே மடிவேன் அதுதான் எனக்கு பெருமை. அந்த பெருமை கிடைத்தால் போதும். அதுதான் எனது பாக்கியம். என் பொது வாழ்க்கையில் எனக்கு இப்படி ஒரு விருது கொடுத்து என்னை இதுவரை யாரும் கௌவரப்படுத்தியது இல்லை. முதல்வரிடம் கைகூப்பி கேட்கிறேன். முதல்வரிடமும், திருமாவிடமும் நான் கேட்டுக்கொள்வது உடல்நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள். உங்களின் விழிவட்டப் பார்வையில் என்னையும் வைத்துக்கொள்ளுங்கள். இந்த தலைமுறைக்கு உங்களை விட்டால் வேறு யாறும் இல்லை. வட மாவட்டத்திற்கு தலைவன் திருமா தான். தமிழ்த்தாயை தெய்வமே வணங்குகிறது. இதை மறைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்காக என் வாழ்க்கையை இழந்தேன், காங்கிரஸ் கட்சி எனக்கு ஒன்றுமே செய்யவில்லை .
இரண்டாம் விடுதலை போரில் விடுதலை வாங்கி தந்தவர் நீங்கள் தான். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று நீங்கள் பொறுப்பு ஏற்கும் போது, உங்களது மனைவி (துர்கா ஸ்டாலின்) கண்ணீர் வடித்தார்கள். நானும் கண்ணீர் வடித்தேன். 40 ஆண்டுகளுக்கு முன்பே தன்னை கருணாநிதி அழைத்ததார். அப்போது எனக்கு புத்திக்கு அது உரைக்கவில்லை. கருணாநிதியை எதிர்த்து தன்னை நரசிம்மராவ் தான் வலுகட்டாயமாக தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சிக்காக ஒரு ஒலி நாடாவே வெளியிட்ட என்னை, இன்று அரசியல் அநாதையாக்கிவிட்டார்கள். திருமா சிறுத்தை என்று சொல்கிறார்கள். ஆனால் சிறுத்தைகளுக்கு தலைமை தாங்கும் ஒரே சிங்கம் திருமா தான்’ இவ்வாறு நெல்லை கண்ணன் பேசினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.