திருநெல்வேலியில், சக மாணவர் மீது தாக்குதல் நடத்திய தனியார் பள்ளி மாணவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில் எல்.ஐ.சி மண்டல அலுவலகம் அமைந்துள்ள சாலையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், 8-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர் ஒருவரை, சக மாணவர் நேற்று (ஏப்ரல் 15) அரிவாளால் வெட்டினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலை தடுக்கச் சென்ற ஆசிரியருக்கும் காயம் ஏற்பட்டது. குறிப்பாக, பென்சில் மாற்றுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில், இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறை தரப்பினர் தெரிவித்துள்ளனர். அதன்படி, "பள்ளி மாணவர்கள் இருவருமே நண்பர்கள். இருவருமே 8-ஆம் வகுப்பு பயின்று வருகின்றனர். சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு பென்சில் வாங்குவது தொடர்பாக இரண்டு மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அதில் ஏற்பட்ட மனஸ்தாபம் தொடர்பாக இரண்டு மாணவர்களும் பேசாமல் இருந்துள்ளனர். அதன் விளைவாக, நேற்று (ஏப்ரல் 15) ஒரு மாணவரை மற்றொரு மாணவர் அரிவாளால் தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு ஆளான மாணவரின் உடல்நிலை சீராக உள்ளது. பயப்படும் அளவிற்கு அவரது உடல்நிலை இல்லை.
இச்சம்பவம் தொடர்பாக புகார் பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாக்குதல் நடத்திய மாணவனை, குழந்தைகள் நலத்துறையிடம் ஒப்படைக்க உள்ளோம். இந்த தாக்குதலை தடுக்க முயன்ற சமூக அறிவியல் ஆசிரியருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட மாணவர், தன்னுடைய புத்தகப் பையில் அரிவாளை மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளார்" என்று உதவி ஆணயர் சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட மாணவன், காவல் நிலையத்தில் சரணடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த மாணவனை, இளஞ்சிறார் நீதிகுழுமத்தின் முன்பு ஆஜர்படுத்திய போலீசார், கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். இந்நிலையில், வரும் 29-ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாணவனை சீர்திருத்த குழுமத்தில் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மாணவனுக்கு ஆலோசனை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.