அரசியல் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாக எழுந்த புகாரின் பேரில், நெல்லை மாவட்ட நில எடுப்பு வட்டாட்சியர் செல்வக்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் அவரிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நில எடுப்பு பிரிவு வட்டாட்சியராக செல்வக்குமார் பணிபுரிந்து வந்தார்.இவர் நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாக சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் பகிரப்பட்டு புகார்கள் எழுந்தன. ஒரு அரசு அதிகாரி அரசியல் கட்சி நிகழ்ச்சிகளின் மேடைகளில் பங்கேற்கக் கூடாது என்ற விதிகள் உள்ள நிலையில், இவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் வலியுறுத்தப்பட்டன.
இந்நிலையில், நெல்லை மாவட்ட நில எடுப்பு பிரிவு வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த செல்வக்குமார் பணியில் இருந்து மாற்றம் செய்து அவரை காத்திருப்போர் பட்டியலில வைக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, வட்டாட்சியர் செல்வக்குமார் பணியில் இருந்து மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், செல்வகுமார் அரசியல் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றது குறித்த புகார் தொடர்பாக அவரிடம் எழுத்துப்பூர்வமாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் கேட்டுள்ளது. செல்வகுமார் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“