திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயில் தமிழக சிவாலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலில் நெல்லையப்பர், அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் என ஐந்து தேர்கள் உள்ளன. இதில் நெல்லையப்பர் தேர் தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர் என்னும் பெருமையைக் கொண்டதாகும். சுமார் 70 அடி உயரமும், 450 டன் எடையுடன் மிகவும் கம்பீரமாக இந்தத் தேர் காணப்படும்.
நெல்லையப்பர் கோயிலில் 518வது ஆண்டு ஆனிப்பெருந்திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் மைய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது.
அப்போது ஆட்சியர் கார்த்திகேயன், திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் ராபர்ட் புரூஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் காலை 7.18 மணிக்கு சுவாமி தேரின் வடத்தை தூக்கி இழுக்க தொடங்கிய அடுத்த நொடியே மூன்று தேர் வடங்களும் அறுந்து போனது. அடுத்த சில நிமிடங்களில் பெண்கள் இழுத்து வந்த நான்காவது வடமும் அறுந்தது.
இதனால் தேரை இழுப்பதில் தாமதம் ஏற்பட்டது. உடனடியாக மாற்று வடம் கொண்டுவரப்பட்டு தேரில் கட்டப்பட்டது. 40 நிமிடம் தாமதமாக தேரோட்டம் மீண்டும் தொடங்கிய நிலையில் மீண்டும் ஒரு சில வினாடிகளில் வடம் அறுந்தது. பின்னர் மீண்டும் மாற்று வடம் கட்டப்பட்டு தேர் இழுக்கப்பட்டு, 500 மீட்டர் தொலைவை தேர் கடந்த நிலையில் 3-வது முறையாக தேரின் வடம் அறுந்தது.
இப்படி அடுத்தடுத்து 5 முறை திருத்தேர் வடம் அறுந்ததை பக்தர்கள் சிலர் அபசகுனமாக கருதினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, கோயில் உண்டியல், வாடகை, குத்தகை, கட்டண தரிசன கட்டணம் என கோயிலிலிருந்து வருமானத்தை, பணத்தை கொண்டு செல்வதில் தான் தமிழக அரசும், இந்து சமய அறநிலைத்துறையும் முனைப்பாக உள்ளதே தவிர, கோயிலுக்குரிய எந்த வசதிகளும் பராமரிப்பு பணிகளும் செய்யாமல் அலட்சியப்படுத்துகிறது. எனவே, இந்த சம்பவத்துக்கு முழு பொறுப்பேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும், இந்து முன்னணி வலியுறுத்தியது.
இந்நிலையில் இன்று சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் இதுதொடர்பாக பேசிய அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ”நெல்லையப்பர் கோவில் தேர் 28-28 அகலம் மற்றும் 80 அடி உயரம் கொண்ட தேர். நேற்று தேர்வடத்தை நெம்புகோல் தருவதற்கு முன்னதாக பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஒரே நேரத்தில் இழுத்ததன் காரணமாகவே தேர்வடம் அறுந்தது.
மாறாக திருச்செந்தூரில் தேர்வடம் தயாராக இருந்த நிலையில் அதனை இணைத்து 9:30 மணியளவில் வெற்றிகரமாக 5 சுவாமிகள் ஊர்வலம் எடுத்துச்செல்லப்பட்டது.
மேலும், அனைத்து தேர்களுக்கும் இணைப்பு பகுதியில் இணைப்புச் சங்கிலி இருக்கும். நெல்லையப்பர் தேர் 450 டன் கொண்ட தேர். அதற்கான வடம் கயிறால் கட்டினால் தான் இழுக்க முடியும்.
அதுமட்டுமின்றி அதிக எடை கொண்ட தேருக்கு கயிறினால் தான் வடம் அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“