Advertisment

அரசியல் சார்பற்ற புதிய அமைப்பு... விவசாய பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் என தகவல்

நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம் அமைக்கிறோம் என்கிற பெயரில் பரவனாறு திசை மாற்றி பல கிராமங்களில் விளை நிலங்களில் சாகுபடி பயிர்களை அழித்து சூறையாடியது.

author-image
WebDesk
New Update
farmers meetin

தமிழகத்தில் அரசியல் சார்பற்ற எஸ்.கே.எம் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த அமைப்பின் மூலம் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்போம் என்று, பி.ஆர்.பாண்டியன் அய்யாக்கண்ணு ஆகியோர் இணைந்து அறிவித்துள்ளனர்.

Advertisment

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் கட்சி சார்பற்ற சம்யுக்த கிசான் மோர்ச்சா துவங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லியில் போராட்டம் நடத்திய அமைப்பின் தமிழ்நாடு கிளை அரசியல் கொள்கை பார்வையோடு விவசாயிகளின் பிரச்சனைக்கு தலையிட மறுத்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு அரசு மேல்மா விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்துக்கு எதிராக கருத்து கூறவில்லை போராட்டம் நடத்தவில்லை.

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளுக்கு விரோதமான மூன்று சட்டங்களைக் கொண்டு வந்து இந்திய விவசாயிகளை கார்ப்பரேட் முதலாளிகளிடம் அடகு வைப்பதற்கும், விளைநிலங்களை விரும்பிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்துக் கொள்வதற்கும், வர்த்தக சூதாடிகள் வேளாண் வணிகத்தில் கால் பதிப்பதற்கும் வழி வகுத்தது.

இதனை எதிர்த்து பல்வேறு கட்சி சார்பற்ற விவசாயிகள் அமைப்பைக் கொண்டு துவக்கப்பட்டது சம்யுக்த்த கிசான் மோர்ச்சா என்ற பெயரிலான ஐக்கிய விவசாயிகள் சங்கம் (எஸ்.கே.எம்). இந்த சங்கம் டெல்லியில் ஓர் ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் கட்சிகள் துணை இன்றி விவசாயிகள் மட்டும் ஒன்றிணைந்து வரலாறு காணாத போராட்டத்தை நடத்தியது. எந்த போராட்டத்தையும் பொருள் படுத்தாத மோடி அரசு அடிபணிந்தது, மண்டியிட்டது. வேளாண் விரோத சட்டங்கள் மூன்றையும் திரும்பப்பெற்றது.

எம்.எஸ்.பி-க்கான உத்தரவாத சட்டம் கொண்டுவரப்படும் என்று பிரதமர் மோடியே அறிவித்தார். ஆனால் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. இதனை எதிர்த்து வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி பஞ்சாபில் துவங்கி டெல்லி நோக்கி மாபெரும் விவசாயிகள் பேரணி நடத்த இருக்கின்றனர். அதனைத்தொடர்ந்து போராட்டங்களையும் துவக்க உள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் புதிய ஆட்சி ஏற்பட்டது. மோடி அரசு கொண்டு வந்தததை விட மிகக் கொடிய சட்டமான தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் -2023 கொண்டு வரப்பட்டுள்ளது.

இச்சட்டம் விளை நிலங்களை விவசாயிகள் ஒப்பதல் இன்றி அபகரித்துக் கொள்வதற்கும், ஏரிகள், நீர்நிலைகள், ஆறுகள் உள்ளிட்ட நீர்வழி பாதைகளை தன் விருப்பத்திற்கு அபகரித்துக் கொள்வதற்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையூறாக ஆறுகள் இருக்குமேயானால் அதை திசை மாறி நீரோட்டத்தை மாற்றிக் கொள்வதற்கும் இச்சட்டம் வழிவகுக்கிறது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோல விவசாயிகளுக்கு எதிரான கொடுமையான சட்டத்தை எந்த மாநில அரசும் கொண்டு வரவில்லை. இதனை பயன்படுத்தி நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம் அமைக்கிறோம் என்கிற பெயரில் பரவனாறு திசை மாற்றி பல கிராமங்களில் விளை நிலங்களில் சாகுபடி பயிர்களை அழித்து சூறையாடியது. இதற்கு தமிழ்நாடு காவல்துறை முழு பாதுகாப்பு அளித்தது அனைவரும் அறிந்ததே.

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொள்வதோடு அப்பகுதியில் இருக்கிற 11 ஏரிகளையும் அபகரித்து விமான ஓடுதளம் அமைப்பதற்கான நடவடிக்கையை சட்ட விரோதமாக அதிகாரத்தை பயன்படுத்தி விவசாயிகளை அச்சுறுத்தி நிலங்களை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு முயற்சித்து வருகிறது. மேல்மா சிப்காட் அமைக்கிறோம் என்கிற பெயரில் விவசாயிகள் ஒப்புதலின்றி விளைநிலங்களை கைப்பற்றுவதும், கொடுக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வெளியில் வர முடியாத வழக்குகளை போட்டு தண்டிக்க முயற்சித்தது.

இறுதியாக போராட்டத்தை தலைமையேற்று நடத்திய ஏழு விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டு சிறையில் அடைத்தது.  தமிழ்நாடு தவிர உலகத்தில் எந்த நாடுகளிலும் இதுவரையிலும் விவசாயிகள் மீது இவ் வழக்கு தொடரப்படவில்லை. இதைவிட கொடுமையானது ஆறு விவசாயிகளுடைய குடும்பத்தார்கள் இனி நிலத்தை தர மறுக்க மாட்டோம், சிப்காட்டுக்கு எதிராக போராட மாட்டோம். எங்கள் நிலத்தை எடுத்துக் கொள்வதில் எங்களுக்கு எந்த தடையும் இல்லை என்று எழுதி கொடுத்ததால் ஆறு பேர்கள் மீதான குண்டர் சட்டம் திரும்ப பெறப்படுவதாகவும், அருள் என்கிற விவசாயி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் போராட்டத்தை தூண்டினார் என்பதால் அவர் மீதான குண்டர் சட்டம் திரும்ப பெறப்படாது என்றும் முதலமைச்சர் அறிக்கை மூலம் தெளிவுபடுத்தி இருப்பது ஒட்டுமொத்த விவசாயிகளையும் படு குழிக்கு தள்ளும் செய்யலாகும்.

ஜனநாயகத்தையே அடியோடு அழிக்கும் செயலாகும். இதனை உயர் நீதிமன்றமும் தற்போது கண்டித்து இருக்கிறது. இதை விட கொடுமையான ஜனநாய படுகொலை இந்தியா மட்டுமல்ல, உலகத்தில் எந்த ஒரு அரசும் விவசாயிகள் மீது  தொடுக்கவில்லை. இந்நிலையில் தேசிய அளவில் போராடிய எஸ்.கே.எம் அமைப்பு தமிழ்நாட்டில் இதுவரையிலும் வாய் திறக்க முன்வரவில்லை. போராட்டக் களம்கான முன்வரவில்லை. இதனை சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவ்அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

எனவே, இனி தமிழ்நாட்டில் அரசியல் சுயநலத்திற்காக விவசாயிகளை அடிமைப்படுத்துவதும், ஒடுக்க நினைப்பதும், ஒழிக்க நினைப்பதும், விளைநிலங்களை அபகரிக்க துணிவதும், நீர் நிலைகளை தன் விருப்பத்திற்கு அபகரித்துக் கொள்ள கொள்கை ரீதியாக முடிவெடுத்து செயல்படும் திமுக அரசின் அடாவடி அக்கிரமங்களை பொறுத்துக் கொள்ள எஸ்கேஎம் பெயரை பயன்படுத்துவதை ஏற்க முடியாது. தமிழ்நாட்டு விவசாயிகள் மீது தொடர்கிற திமுக அரசின் சட்ட விரோத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு தேசிய அளவில் கட்சி சார்பற்ற முறையில் அரசியல் பாகுபாடு இல்லாத வகையில் விவசாயிகள் நலனை மட்டுமே கொள்கையாகவும், அரசியலாகவும் கொண்டு செயல்படுகிற ஒரு அமைப்பாக எஸ்கேஎம் அமைப்பை தமிழ்நாட்டில் உருவாக்கி இருக்கிறோம்.

இவ்அமைப்பு எந்த சூழ்நிலையிலும் யாரிடத்திலும் அரசியலுக்காகவோ, கூட்டணிகளுக்காகவோ, விவசாயிகள் நலனை அடகு வைக்காது. உறுதியோடு அதனை எதிர்த்து ஆட்சியாளர்களின் விவசாயிகள் விரோத செயல்களை அம்பலப்படுத்தி போராட்டத்தில் ஈடுபடும் என்கிற கொள்கை முடிவோடு இவ் அமைப்பை தமிழ்நாட்டில் கட்டமைத்திருக்கிறோம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம் என எஸ்.கே.எம். அமைப்பின் தலைவர் அய்யாக்கண்ணு, கன்வீனர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Ayyakannu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment