திருச்சியில் ரூ.120 கோடியில் அமைக்கப்படும் காவிரி புதிய பாலத்துக்காக எம்எல்ஏ அலுவலகம், மகளிர் காவல் நிலையத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வு செய்யப்பட்ட இடங்களை கையகப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த விபரம் வருமாறு;
திருச்சி சிந்தாமணி- மாம்பழச் சாலை இடையே காவிரி ஆற்றில் புதிய பாலம் கட்டுவதற்காக ஸ்ரீரங்கம் எம்எல்ஏ அலுவலகம், அனைத்து மகளிர் காவல்நிலையம் உள்ளிட்ட கட்டிடங்களை இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்வு செய்யப்பட்ட இடங்களை கையகப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.
திருச்சி சிந்தாமணியையும், மாம்பழச் சாலையையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1976-ம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் தற்போது பயன்பாட்டில் உள்ளது. அதிகரித்து வரும் வாகனப் பெருக்கத்துக்கேற்ப இவ்வழித்தடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மற்றொரு பாலம் கட்ட அமைச்சர் கே.என்.நேரு முயற்சி மேற்கொண்டார்.
அதனடிப்படையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் தற்போதுள்ள பாலத்தின் அருகிலேயே ரூ.120 கோடி செலவில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் அண்மையில் திருச்சி வந்து, புதிய காவிரிப் பாலம் அமைய உள்ள பகுதிகளைப் பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து புதிய காவிரிப் பாலத்துக்கான திட்ட அறிக்கைக்கான ஆய்வுப் பணிகள் தொடங்கின. அதில், தற்போதுள்ள காவிரிப் பாலத்தின் மேல்புறத்தில் 5 அடி தொலைவில் 14 தூண்களுடன் 18 மீட்டர் அகலம், 544 மீட்டர் நீளத்தில் 4 வழிப்பாதையாக புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேலும், புதிய பாலத்தின் மேல்புறத்தில் மட்டும் ஒன்றரை மீட்டரில் நடைபாதை அமைக்கப்படும். இதற்காக, சிந்தாமணி, மாம்பழச்சாலை பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக வருவாய்த் துறையினரும், மாநில நெடுஞ்சாலைத் துறையினரும் இணைந்து ஆய்வு செய்ததில், மாம்பழச்சாலை சிக்னலை ஒட்டியுள்ள ஸ்ரீரங்கம் எம்எல்ஏ அலுவலகம், அதன் அருகிலுள்ள ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம், மத்திய உளவுப்பிரிவு (ஐ.பி) அலுவலகத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை இடிக்க வேண்டிய தேவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல சிந்தாமணி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்திலுள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள், கோயில் மற்றும் தனியார் நிலங்களையும் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான முதற்கட்ட பணிகளில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “புதிய பாலத்துக்காக கையகப்படுத்த வேண்டிய நிலங்களில் பெரும்பாலானவை அரசு நிலங்கள் என்பதால், எவ்வித பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பில்லை. கையகப்படுத்தும் நிலங்களுக்கான இழப்பீடு மற்றும் இடிக்கப்படும் அரசு அலுவலகங்களுக்கு மாற்று ஏற்பாட்டுக்கான மதிப்பீட்டு தொகையாக ரூ.10 கோடி வரை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களை கையகப்படுத்தி, அவற்றிலுள்ள கட்டிடங்களை இடிப்பதற்கான முயற்சியை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொண்டு வருகிறோம். அமைச்சர் கே.என்.நேரு முழு முயற்சி மேற்கொண்டுள்ளதால், விரைவில் இதற்கு ஒப்புதல் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு பணிகள் தொடங்கப்படும்" என்றனர்.
புதிய காவிரி பாலம் அமைக்கப்படுவது குறித்து சாலைப் பயனீட்டாளர்கள் நலக்குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாரப்பன் தெரிவித்ததாவது; "திருச்சி ஜங்ஷன் பாலத்துக்காக ரயில்வே இடத்தைப் பெறுவதில் ஏற்பட்ட சிக்கலால் கருமண்டபம் செல்லும் அணுகுசாலை குறுகலாகிவிட்டது. மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அரிஸ்டோவுக்கு வரும் வழித்தடத்தின் அணுகுசாலையும் கனரக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு குறுகலாக உள்ளது.
அதேபோல மன்னார்புரம் வழித்தடத்தில் போதியளவுக்கு ராணுவ நிலத்தைப் பெற முடியாததால் அங்கும் சாலை குறுகி, பாலம் இறங்குமிடத்தில் வளைவுடன் அமைப்பதால் விபத்து அபாயத்துடன் காணப்படுகிறது. இதனால், பாலம் கட்டப்படுவதன் நோக்கமே சிதைந்து, மக்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மாநில நெடுஞ்சாலைத் துறையினர் புதிதாக அமைக்க விருக்கும் காவிரிப் பாலத்தையாவது எவ்வித நெருக்கடிக்கும் அடிபணியாமல், அரசு மற்றும் தனியாரிடமிருந்து போதியளவுக்கு நிலத்தைக் கையகப்படுத்தி, உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் சீரான போக்குவரத்துக்கு ஏற்றதாக அகன்றதாக அமைக்க வேண்டும்" என்றார்.
எது எப்படியோ திருச்சியின் போக்குவரத்து நெருக்கடி ஒரு தீர்வாகவும், பொதுமக்கள் சென்னை போன்ற் பெரு நகரங்களில் பொழுதுபோக்குவதற்காக பல்வேறு அம்சங்கள் இருப்பதுபோல் திருச்சியில் இல்லாத நிலையில் புதிய காவிரிப்பாலம் கட்டுமானம் முழுமை பெற்றால், பழைய காவிரிப்பாலம் திருச்சியின் பொழுதுபோக்கு ஸ்தலமாக மாற்றினால் பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
அதேநேரம், திருச்சியில் புதிய காவிரிப் பாலத்திற்கான ஒப்புதல் பெறப்பட்டு, அமைச்சர் கே.என்.நேருவின் முயற்சியால் விரைவில் அடிக்கல் நாட்டப்பட்டு, திருச்சியின் அடையாளத்திலும், திமுக ஆட்சியின் அத்தியாயத்திலும் முக்கியமானதாக இந்தப் புதிய காவிரிப்பாலம் அமையும் என்கின்றனர் திமுக விசுவாசிகள்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.