/indian-express-tamil/media/media_files/2025/05/02/LI4YQ5upr4AeS2CIgR55.jpg)
4 ஏக்கர் பரப்பு, 46 பஸ் நிறுத்தும் வசதி: புதுச்சேரியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு
புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தை பொலிவுறு நகா் திட்டத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் 46 பேருந்துகள் நிறுத்தும் வசதி, 31 கடைகளுடன் ரூ.29.50 கோடியில் மேம்படுத்த 2023-ல் முதல்வா் ரங்கசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிலையில், அனைத்து நவீன வசதிகளுடன் பேருந்து நிலைய பணிகள் நிறைவடைந்தது.
இங்கு நகரப் பேருந்துகள், புறநகர் பேருந்துகள், மினி பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளுக்கு தனித்தனியாக நடைமேடைகள் உள்ளன. பயணிகளுக்காக காத்திருப்பு கூடம், ஓட்டல்கள், டிக்கெட் முன்பதிவு மையம், லாக்கர் அறை, கழிப்பறைகள், ஏ.டி.எம்., தங்கும் விடுதிகள், பார்க்கிங் போன்ற நவீன வசதிகள் உள்ளன.
இதையடுத்து வெள்ளிக்கிழமை (மே 2) காலை 9.40 மணியளவில் சீரமைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் திறந்து வைத்து, பேருந்து சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். பின்னர் பொலிவுறு நகர் பேருந்து முனைய வளாகத்தினை சுற்றிப் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில், சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அமைச்சா்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனர்.
பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், குடிமைப் பொருள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமார், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் நேரு, பாஸ்கர், சிவசங்கர், வெங்கடேசன், ராமலிங்கம், தலைமைச் செயலர் சரத் சவுகான், அரசுச் செயலர்கள் ஜெயந்தகுமார், கேசவன், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி பொலிவுறு நகரத் திட்ட தலைமை செயல் அதிகாரி ருத்ரகௌடு, உள்ளாட்சித் துறை இயக்குநர் சக்திவேல், போக்குவரத்து ஆணையர் சிவக்குமார், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, புதுச்சேரி பொலிவுறு நகர வளர்ச்சி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.