புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த 629 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட முடியாது என தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.
கடந்த 2006 - 11ம் ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சி காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. 2011ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின், புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்ட புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் அனுப்பிய சம்மனை எதிர்த்து மறைந்த முதல்வர் கருணாநிதி, தற்போதைய தி.மு.க. தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிபதி ரகுபதி ஆணையத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதுடன், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று, அவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து ரகுபதி ஆணையத்திடம் பெறப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், தமிழக லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் இன்று மீண்டும் விசாரணைக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர், நீதிபதி ரகுபதி ஆணையத்தை நிறுத்தி வைக்கவும், வழக்கு தொடர்பான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பி வைக்கவும், அந்த ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யவும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கடந்த ஆகஸ்டு 3 ஆம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவை உறுதி செய்து இறுதி உத்தரவை பிறப்பித்துள்ளார் என வாதிட்டார்.
தற்போது விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது விசாரணையில் யார் மீதும் குற்றம்சட்டவில்லை விசாரணையில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், புதிய தலைமை செயலகம் கட்டியதில் 629 கோடி ரூபாய் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார் உள்ளது. எனவே அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட முடியாது என தெரிவித்தார்.
தனி நீதிபதி குற்ற நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்ட போதும், அரசு விசாரணைக்கு மட்டுமே உத்தரவிட்டு உள்ளது என்றும் இந்த விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.
விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததால் வழக்கின் தீர்ப்பை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.