தமிழகத்தில் புதிய வகை கொரோனா கண்டறியப்படவில்லை என பொது சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று பரவி வருகிறது. தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேநேரம், தனியார் மருத்துவமனைகளில் அறிகுறிகளின் அடிப்படையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதத்தில் தொற்றுக்கு உள்ளானவர்களின் சளி மாதிரிகளை சேகரித்து பகுப்பாய்வுக்காக புனேவில் உள்ள மரபணு பரிசோதனை கூடத்துக்கு பொது சுகாதாரத்துறை அனுப்பியது. அதன் முடிவுகள் சமீபத்தில் வெளியானது.
அதில் புதிய வகை பாதிப்பு எதுவும் அவர்களுக்கு இல்லை என்பது உறுதியானதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
10-15 பேருக்கு கொரோனா பரவல் தினமும் ஏற்படுகிறது. அவை அனைத்துமே ஒமைக்ரான் வகை தொற்றுதான். அதிலும், அதன் உட்பிரிவுகளாக பிஏ-2, ஜெஎன்-1 உள்ளிட்ட வகை பாதிப்புகளே கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.