குரங்கணிக்கு ஜோடிகளாக சென்ற புதுமண தம்பிகளான ஈரோட்டைச் சேர்ந்த விவேக் மற்றும் திவ்யா காட்டுத் தீயின் சதியால் தங்களின் வாழ்க்கையை இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவிகள், சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் பரவிய பயங்கர காட்டுத் தீயில் சிக்கினர். இதில் முதல்கட்டமாக 22 மாணவ, மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காட்டுக்குள் சிக்கியுள்ள மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.குரங்கணி தீ விபத்தில் சிக்கி சென்னையைச் சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேர் பலியானதாக தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்திருக்கிறார். இதில் ஈரோட்டைச் சேர்ந்த விவேக்கும் ஒருவர் . மலையேற்ற பயிற்சிக்கு தேனி வனப்பகுதிக்கு தனது மனைவியுடன் புதுமாப்பிள்ளை விவேக் மிகுந்த சந்தோஷத்துடன் சென்றுள்ளார்.
தங்களின் ட்ரெக்கிங் பயணத்தை குறித்து விவேக் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கதில் ஆவலுடன் பதிவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் திவ்யா, விவேக் தம்பதியர் திருமணமாகி தங்களின் 100வது நாளை கொண்டாடியுள்ளனர்.
அடுத்த மாதம் துபாய் செல்ல திட்டம்மிட்டிருந்த விவேக் இறுதியாக தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் குரங்கணி பகுதிக்கு ட்ரெக்கிங் செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால், இதுவே அவரின் இறுதி பயணமாக மாறும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. இயற்கையின் அழகை ரசிக்க, தனது மனைவி மற்றும் நணபர்களுடன் சென்ற விவேக் தான் முதலில் தீ நெருங்கி வந்ததைப் பார்த்துள்ளார். அதன் பின்பு காற்றின் வேகத்தால் தீ வேகமாக பரவியுள்ளது. இதனால் தனது நண்பனுடன் சேர்ந்து தீயில் இருந்து தனது மனைவியைக் காப்பாற்ற திவ்யாவை அணைத்த படி நீண்ட தூரம் அவர் ஓடியுள்ளார்.