தமிழக பள்ளிக் கல்வித் துறையில் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் (சமக்ரா சிக்ஷா) மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது.
இந்த நிதியை பெற மத்திய அரசின் விதிமுறைகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும். இதற்கிடையே மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் பிஎம் ஸ்ரீ பள்ளி எனும் திட்டம் உள்ளது. இத்திட்டத்தில் டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம், தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள் இதுவரை இணையவில்லை.
அதேநேரம், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேர மும்மொழி கொள்கையில் இருந்து விலக்கு உட்பட சில கோரிக்கைகளை தமிழகம் முன்வைத்தது. ஆனால், அதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டதால் இந்த திட்டத்தில் தமிழகம் சேரவில்லை.
இதனால் கடந்த கல்வியாண்டில் (2023-24) 4-வது தவணை நிதியுதவியும், நடப்பு கல்வியாண்டில் (2024-25) முதல் தவணை நிதியையும் மத்திய அரசு நிறுத்தியுள்ளது. இதனால் மாநில அரசின் பங்களிப்பை கொண்டு தற்போது திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், நீண்ட காலத்துக்கு இதை கொண்டு சமாளிக்க முடியாது.
எனவே பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் பாதிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தன் X பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தி இந்து நாளிதழில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி, ‘புதிய தேசிய கல்வி கொள்கைக்கு தலைவணங்க மறுப்பதற்காக, கல்வியில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கான நிதியை மறுப்பது, அதே வேளையில் குறிக்கோள்களில் வெற்றியடையாதோருக்குத் தாராளமாக நிதி ஒதுக்குவது, இப்படித்தான் மத்திய பாஜக அரசு தரமான கல்வியையும் சமத்துவத்தையும் ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளதா? முடிவை நாட்டுக்கும், நாட்டு மக்களின் புரிதலுக்குமே விட்டுவிடுகிறேன்’, என்று விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் X பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
‘ஒரு விஷயத்தை உருவாக்கும் நோக்கில் ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துக்கு எதிராக இருப்பது அரசியல் சாசன உணர்வுக்கும் ஓர் ஒருங்கிணைந்த இந்தியாவுக்கும் எதிரானது. பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பின்னரே தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டது.
தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான உங்களின் திட்டமிட்ட எதிர்ப்பில் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்.
Healthy competition amongst the states is always welcome in a democracy. However, pitting states against each other to make a point, goes against the spirit of the Constitution and the value of a unified India. NEP 2020 was formulated through wide range of consultations and has… https://t.co/16ntQqPQs8
— Dharmendra Pradhan (@dpradhanbjp) September 9, 2024
தமிழ் உள்ளிட்ட தாய்மொழியில் கல்வி பயிற்றுவிப்பதை நீங்கள் எதிர்க்கிறீர்களா? தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வுகள் நடத்துவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா? தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடத் திட்டத்தையும், பாடப் புத்தகங்களையும் உருவாக்குவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா? ஒட்டுமொத்த வளர்ச்சியையும், பல்துறை அறிவையும், எதிர்கால தேவையை நிறைவேற்றக் கூடியதாகவும் அமைந்துள்ள புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறீர்களா?
அப்படி இல்லாவிட்டால், உங்களின் அரசியல் லாபத்தை தள்ளிவைத்துவிட்டு தமிழக மாணவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துகிறேன்’, என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.