இன்றைய தினம் (ஏப்ரல் 6) மோடி புதிதாக திறந்து வைத்த செங்குத்து தூக்கு பாலம் பழுதடைந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்தியாவில் கடல் பகுதியில் அமைக்கப்பட்ட முதல் ரயில்வே பாலம் என்ற சிறப்பை, பாம்பன் பாலம் பெற்றுள்ளது. இந்தப் பாலம் கட்டப்பட்டு நூற்றாண்டுகளை கடந்ததால், அதன் உறுதித்தன்மை இழக்கத் தொடங்கியது.
இதனைக் கருத்திற்கொண்டு சுமார் ரூ. 550 கோடி மதிப்பீட்டில் புதிய பாலத்தை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன. இந்த பணிகள் அனைத்தும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் முடிவடைந்தது. முன்னதாக, பழைய பாலம் இருபுறமும் தூக்கப்படும் வகையில் அமைந்திருந்த நிலையில், தற்போது செங்குத்து தூக்கு பாலம் உருவாக்கப்பட்டது.
இந்த புதிய பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். குறிப்பாக, இலங்கையில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து நேரடியாக தமிழகத்திற்கு வந்து இந்த பாலத்தை திறந்து வைத்தார். அவருக்கு தமிழக அரசு சார்பிலும், பா.ஜ.க-வினர் தரப்பில் இருந்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், புதிதாக திறக்கப்பட்ட செங்குத்து தூக்கு பாலத்தின் கீழ் இந்திய கடற்படை கப்பலும் பயணித்தது. இதற்காக செங்குத்து தூக்கு பாலம் ஏற்றப்பட்டது. அப்போது, செங்குத்து தூக்கு பாலம் கீழே இறக்க முடியாமல் பழுது ஏற்பட்டது. தூக்கு பாலம் ஒருபுறம் ஏற்றமும், இன்னொரு பக்கம் இறக்கமுமாக இருப்பதால் சிக்கல் உருவானது. இதனைத் தொடர்ந்து பழுது நீக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.